செய்திகள்
மம்தா பானர்ஜி

தேர்தல் முடிவை எதிர்த்த வழக்கு - மம்தா பானர்ஜி திரும்ப பெற்றதாக வைரலாகும் தகவல்

Published On 2021-06-29 05:31 GMT   |   Update On 2021-06-29 05:31 GMT
நந்திகிராம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மம்தா பானர்ஜி திரும்பப் பெற்றதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்டது. எனினும், அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் இடையிலான பதற்ற சூழல் இதுவரை குறையவில்லை.

அம்மாநிலத்தின் சில பகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி முதலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பின், தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்தார்.  

இதனிடையே, ``அச்சம் அடைந்த மம்தா பானர்ஜி நந்திகிராம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற உத்தரவிட்டு இருக்கிறார்," என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், இந்த வழக்கு மே 21, 2021 அன்று தொடரப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஜூன் 18 ஆம் தேதி மம்தா பானர்ஜியின் ஆலோசகர் சஞ்சய் பாசு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டலுக்கு எழுதிய கடிதத்தில், `மனுவை விசாரிக்கும் நீதிபதி கௌஷிக் சந்தா பாஜகவின் உறுப்பினராக இருந்துள்ளார். இதனால் தீர்ப்பு எதிர்கட்சிக்கு சாதகமாக வழங்கப்பட வாய்ப்பு இருப்பதால் நீதிபதியை மாற்ற வேண்டும்,' என குறிப்பிட்டு இருக்கிறார்.

பின் வழக்கு விசாரணை ஜூன் 24 அன்று நடைபெற்றது. இந்த வழக்கில் மனுதாரரான மம்தா பானர்ஜி இணையவழியே கலந்து கொண்டார். வழக்கு விசாரணை நிறைவுற்று வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. வைரல் பதிவுகளில் உள்ளதை போன்று, வழக்கு திரும்பப் பெறப்பட்டு இருப்பதாக செய்தி குறிப்புகளோ அல்லது நீதிமன்ற வலைதளத்திலோ எந்த தகவலும் இடம்பெறவில்லை.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News