ஆன்மிகம்
சிவன் குடும்பம்

தீர்க்க சுமங்கலி வாழ்வைத் தரும் அமாவாசை சோமவாரம் விரதம்

Published On 2021-04-12 08:18 GMT   |   Update On 2021-04-12 08:18 GMT
அமாவாசை சோமவாரம் அன்று விரதம் இருந்து வருவது பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இது தொடர்பான ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.
12-4-2021 அமாவாசை சோமவாரம்

அமாவாசை வழிபாடு என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. அமாவாசையும், சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையும் சேரும் தினம், முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது. அமாவாசை சோமவாரம் அன்று விரதம் இருந்து வருவது பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும் என்கிறார்கள். இது தொடர்பான ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த தேவசுவாமி- தனவதி தம்பதியருக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். மகனின் பெயர் விஷ்ணுதாசன், மகளின் பெயர் குணவதி. இதில் குணவதிக்கு திருமணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அனைத்து ஏற் பாடுகளையும் விமரிசையாக செய்து வந்தனர். திருமணத்திற்கு மூன்று நாட்களே இருந்தது.

இந்த நிலையில் அந்த வீட்டிற்கு யாசகம் கேட்டு, சாது ஒருவர் வந்தார். அவர் யாரிடம் யாசகம் பெற்றாலும், அவர்களை ‘தீர்க்க சுமங்கலி பவ’, ‘சுப மங்கலம் நிலவட்டும்’ என்று கூறி ஆசீர்வதிப்பார். அன்று மணப்பெண்ணான குணவதிதான், சாதுவுக்கு யாசகம் வழங்கினாள். அப்போது அந்த சாது, “தர்மவதி பவ” என்று ஆசி வழங்கினார்.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த குணவதியின் தாயார் தனவதி, “சுவாமி, ‘தர்மவதி பவ’ என்று சொல்லி என் மகளுக்கு ஆசி வழங்கினீர்கள். அதற்கான அர்த்தம் என்ன?” என்று கேட்டார்.

“தாயே.. உன் மகளின் கழுத்தில் மங்கல நாண் அணிவிக்கப்பட்டு, மணமக்கள் இருவரும் அக்னியை வலம் வருவார்கள். அந்தச் சடங்கு நடக்கும் வேளையில், மணமேடையிலேயே உன் மகள் கழுத்தில் தாலி கட்டிய மணமகன் உயிர் விடும் நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் அனைவரையும் வாழ்த்தும் ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று என்னால் உன் மகளை வாழ்த்த முடியவில்லை. எனவேதான், அவள் எனக்கு அளித்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தர்மவதி பவ’ என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தார்.

திருமண நாள் நெருங்கி விட்ட நிலையில், சாது இப்படி சொன்னதைக் கேட்டு தனவதி யும் அவரது குடும்பமும் தளர்ந்து போனது. அதைக் கண்ட சாது, “தாயே.. நீ கவலைப் படாதே. இந்த பிரச்சினையில் இருந்து வெளியில்வர ஒரே ஒரு வழி இருக்கிறது. கிழக்கு கடல் பகுதியில் ஒரு தீவு இருக்கிறது. அதில் சோமா என்ற வயது முதிர்ந்த சுமங்கலி வசித்து வருகிறார். தெய்வீக சக்தியும், புண்ணியங்களும் நிரம்பப் பெற்றவர். அவர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றால், எல்லாம் நல்லபடியாக முடியும். உன் மகள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

சாது கூறியதை கேட்டுக் கொண்டிருந்த குணவதியின் சகோதரன் விஷ்ணுதாசன், தன் தங்கையின் மணவாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக சாது சொன்ன அந்த தீவுக்குச் சென்றான். சோமாவின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. அருகில் இருந்த கோவிலுக்குச் சென்றிருந்தார். விஷ்ணுதாசன் அவசரம் காரணமாக கோவிலுக்கேச் சென்று விட்டான். அங்கு ஒரு வயதான பெண்மணி, அரச மரத்தை சுற்றி வந்துகொண்டிருந்தார். அவர்தான் சோமா என்பதை அறிந்த விஷ்ணுதாசன், அவரது காலில் விழுந்து, நடந்ததைக் கூறி, தன்னுடன் வந்து தங்கையின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தான். சோமாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

திருமண நாள் அன்று, சோமா மற்றும் அவரது கணவர் முன்னிலையில் குணவதிக்கு திருமணம் நடந்தது. மணமக்கள் அக்னியை வலம் வந்தபோது, மணமகன் மயங்கி விழுந்து மரணித்தான். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சோமா தம்பதியரும் கவலையுற்றனர். சோமா, இறைவனை நினைத்து வேண்டினார். அப்போது அங்கே ஒலித்த அசரீரி, “சோமா.. நீ பல வருடங்களாக சோம வார அமாவாசையில் கடைப்பிடித்து வரும் விரதப்பலனை, மணமகனுக்கு அளித்தால், அவன் உயிர் பெறுவான். அதோடு அந்த தம்பதியரும் நீண்ட காலம் இணைந்து வாழ்வார்கள்” என்றது.

அதன்படியே அமாவாசை சோமவாரத்தில் தான் இருந்த விரதத்தின் பலன்களை, மணமகனுக்கு அளித்தார், சோமா. உடனே மணமகன் உயிருடன் எழுந்தான்.

விரதம் இருப்பது எப்படி?

அமாவாசை தோறும் அரச மரத்தை வலம் வருவது நல்லது. அரச மரத்தை காலை வேளையில்தான் வலம் வர வேண்டும். திங்கட்கிழமையில் வரும் அமாவாசை அன்று சூரிய உதய நேரத்தில் அரச மரத்தை 108 முறை வலம் வந்து பூஜிக்க வேண்டும். பெண்கள் அரச மரத்தை ஒருமித்த மனதுடனும், பக்தியுடனும் வலம் வரும்போது, அவர்களுக்கு அபரிமிதமான சக்தி கிடைக்கும். அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள். அரச மரத்தை வலம் வரும் வேளையில் ‘மூலதோ ப்ரும்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத் சிவ ரூமாய வருக்ஷ ராகாயதே நம’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

திங்கட்கிழமையில் வரும் அமாவாசை சோமவாரம் அன்று, சூரியன் முழுமையாக உதிக்கும் முன்பு அரச மரத்தை ஸ்ரீமத் நாராயணனாக பாவித்து வழிபட்டு, 108 முறை வலம் வரும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
Tags:    

Similar News