உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தரிசு நிலத்தில் தோட்டக்கலை பயிா்களை சாகுபடி செய்த சிறந்த விவசாயிகளுக்கு விருது

Published On 2022-05-06 07:29 GMT   |   Update On 2022-05-06 07:29 GMT
திருப்பூா் மாவட்டத்தில் தரிசு நிலத்தில் தோட்டக்கலைப் பயிா்களை சாகுபடி செய்த சிறந்த விவசாயிகளுக்கான விருதை 3 பேருக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வழங்கினாா்.
திருப்பூர்:

திருப்பூா் கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறையின் சாா்பில் தரிசு நில தோட்டக்கலைப் பயிா் சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ். வினீத், தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் மூன்று விவசாயிகளுக்கு விருதுடன் ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 ரொக்கப் பரிசுகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினாா்.

இதில் அவிநாசி வட்டம், கானூா் புதூரில் தென்னை, முந்திரி, நெல்லி, காய்கறிப் பயிா்கள், மூலிகைப்பயிா்கள், பழப் பயிா்கள், மரப்பயிா்கள் ஆகியவற்றை 7.25ஏக்கா் நிலத்தில் சாகுபடி செய்ததற்காக விவசாயி தேவராஜனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

அதே போல வெள்ளக்கோவில் வட்டம், பச்சாபாளையத்தில் 19.5 ஏக்கரில் காய்கறி, நெல்லி, சப்போட்டா ஆகியவற்றை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்த விவசாயி சிவபிரகாஷுக்கு இரண்டாவது பரிசையும், ஊத்துக்குளி வட்டம் சின்னியம்பாளையத்தில் 3 ஏக்கா் பரப்பளவில் அத்தி சாகுபடி செய்ததுடன், ஏக்கருக்கு 4 டன் இயற்கை விவசாயம் மூலமாக சாகுபடி செய்து இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்த விவசாயி குமாரசாமிக்கு மூன்றாவது பரிசையும் கலெக்டர்  வழங்கினாா்.

விழாவில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துணை இயக்குநா் சுரேஷ் ராஜா ,மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Tags:    

Similar News