செய்திகள்
ரோகித் சர்மா

பிளேஆப் சுற்றுக்கு 4-வது அணியாக கொல்கத்தா - அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பைக்கு வாய்ப்பு

Published On 2021-10-08 07:03 GMT   |   Update On 2021-10-08 07:03 GMT
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அபுதாபி:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கிய இந்தப்போட்டியின் லீக் ஆட்டம் இன்றுடன் முடிகிறது. கடைசி நாளில் இரண்டு போட்டி நடக்கிறது.

இந்த 2 ஆட்டமும் ஒரே நேரத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அபுதாபியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும், துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் மோதுகின்றன.

8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி பெங்களூர் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஐதராபாத் அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.

பிளே ஆப் சுற்றில் நுழைய 4-வது அணிக்கான போட்டியில் கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் இருந்தன. நேற்றைய போட்டி முடிவில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன. கொல்கத்தாவா? மும்பையா? என்பது இன்று இரவு தெரியும்.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்டது.14 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.587 ஆக உள்ளது.

ஏற்கனவே ரன் ரேட்டில் நல்ல நிலையில் இருந்த கொல்கத்தா அணி ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முத்திரை பதித்தது. இதனால் அந்த அணி மிகவும் சிறப்பான நிலையை அடைந்தது.

எனவே கொல்கத்தா அணி பிளே ஆப் சுற்றில் நுழைய மிக மிக அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

நடப்பு சாம்பியனான மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை. 12 புள்ளியுடன் 6 வது இடத்தில் உள்ள அந்த அணி ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

அதாவது முதலில் பேட் செய்து மும்பை 250 ரன்கள் குவிக்க வேண்டும், அதே நேரத்தில் பந்துவீச்சில் ஐதராபாத்தை 80 ரன்களில் சுருட்ட வேண்டும். 2-வது பேட்டிங் செய்தால் நிச்சயமாக வாய்ப்பு இல்லை. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மும்பை வாய்ப்பை பெற முடியும்.

டெல்லி அணி முதல் இடத்தை பிடித்துவிட்டது 2-வது இடத்தைப்பிடிப்பது சென்னையா ? பெங்களூரா? என்பது இன்று தெரியும். பெங்களூரை விட சென்னை அணி ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. அதே நேரத்தில் பெங்களூர் அணி டெல்லியிடம் தோற்றால் அதே 3-வது இடத்தில் தான் இருக்கும்.

Tags:    

Similar News