ஆன்மிகம்
அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் மின்னொளியில் ஜொலிஜொலித்த கோவில் கோபுரமும்

நவராத்திரி: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்

Published On 2020-10-19 03:25 GMT   |   Update On 2020-10-19 03:25 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவ விழா நேற்று தொடங்கி வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது.

விழாவையொட்டி அம்மன் மற்றும் சுவாமி சன்னதி மற்றும் கொலுசாவடி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர அனைத்து கோபுரங்கள் மற்றும் பொற்றாமரைக்குளம் பகுதியிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தருவார். விழாவில் முதல் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கொலு சாவடியில் உற்சவர் மீனாட்சி அம்மன் அருகே 3 படிகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன.

நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் பட்டர்கள் கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் செய்தனர். கொரோனா காரணமாக பக்தர்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News