செய்திகள்
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து

இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

Published On 2021-04-13 04:53 GMT   |   Update On 2021-04-13 04:53 GMT
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனாவை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற 2 வகையான தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதுவரை 10 கோடிக்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. என்றாலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இதற்காக மேலும் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அதில் ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் ஒன்றாகும். இந்தியாவில் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.

இதுதொடர்பாக கடந்த 1-ந் தேதி மத்திய நிபுணர் குழு கூடி ஆய்வு செய்தது. அதில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் நிபுணர் குழு இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. டாக்டர் ரெட்டி நிறுவனத்தின் விண்ணப்பத்திற்கும் ஒப்புதல் வழங்கியது.



இந்த பரிந்துரையை பரிசீலனை செய்த மருந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ)  ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அவசரகால தேவைக்காக கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு, கோவேக்சினை தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் 3வது தடுப்பூசி  ஸ்புட்னிக்-வி ஆகும்.
Tags:    

Similar News