ஆன்மிகம்
ஆகாய்

பைபிள் கூறும் வரலாறு: ஆகாய்

Published On 2019-09-17 04:18 GMT   |   Update On 2019-09-17 04:18 GMT
‘ஆகாய்’ என்பதற்கு ‘திருவிழா’ என்பது பொருள். இன்றைய நாள்காட்டிக் கணக்குப் படிப் பார்த்தால் கி.மு. 520-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ல் அவருக்கு கடவுளின் வார்த்தை முதன் முதலில் வருகிறது.
ஆகாய் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த காலம் வெறும் மூன்று மாதங்கள்.

‘ஆகாய்’ என்பதற்கு ‘திருவிழா’ என்பது பொருள். இன்றைய நாள்காட்டிக் கணக்குப் படிப் பார்த்தால் கி.மு. 520-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ல் அவருக்கு கடவுளின் வார்த்தை முதன் முதலில் வருகிறது. அதை அவர் யூதா நாட்டின் ஆளுநராக இருந்த தாவீதின் வழிமரபினரான செரூபாபேலுக்கும், குரு யோசுவாவுக்கும் அறிவிக்கிறார்.

இஸ்ரேல் நாட்டிலும், யூதாவிலும் இரண்டு காலகட்டங்களில் இறைவாக்குரைக்கும் பணி நடைபெற்றது. ஒன்று மக்கள் தங்களுடைய நாட்டிலேயே இருந்த காலகட்டத்தில் நடந்தது. இன்னொன்று மக்கள் நாட்டை விட்டு எதிரிகளால் துரத்தப்பட்ட பின் நிகழ்ந்தது.

நாட்டிலேயே மக்கள் தங்கியிருந்த காலகட்டத்தில் இறைவாக்குகள் எல்லாம் எச்சரிக்கைகளாக இருந்தன. “பாவ வழியை விட்டு விலகுங்கள், வேற்று தெய்வங்களை விட்டு விலகுங்கள், கடவுளின் கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ளுங்கள், மனம் திரும்புங்கள்” என்பவையே அவற்றின் பொதுவான அம்சங்கள்.

கடவுளின் கோபம் மக்களை வெளியேற்றிய பின்பு வந்த இறைவாக்கினர்கள் இறைவனின் மீட்பின் செய்தியையும், மீண்டும் அவர்களை கட்டமைக்கும் செய்திகளையும், நம்பிக்கையின் வார்த்தைகளையும் உரைத்தனர்.

ஆகாய் இறைவாக்கினரின் இறைவாக்கு, மக்கள் நாட்டை விட்டு வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பின் இறைவனால் கொடுக்கப்பட்டது.

கி.மு. 538-ல் பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனைக் கைப்பற்றுகிறான். அப்போது யூத மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதியளிக்கிறான். சுமார் எழுபது ஆண்டுகளாக பாபிலோனில் இருந்த யூதர்களில் பெரும்பாலானோர் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை. வெறும் 50 ஆயிரம் பேர் மட்டுமே முதல்கட்டமாக நாடு திரும்பினார்கள்.

அவர்கள் செரூபாபேல் மற்றும் குரு யோசுவா ஆகியோரின் தலைமையில் மீண்டும் நாடு திரும்புகிறார்கள். பாழடைந்த நிலங்கள், உடைந்து போன மதில்கள், சிதைந்து போன தேவாலயம் என பழமையின் தேசத்துக்குள் அவர்கள் திரும்பி வருகிறார்கள்.

திரும்பி வந்த அவர்கள் முதலில் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டி நன்றி செலுத்துகின்றனர். இனிமேல் கோவிலைக் கட்டவேண்டும், நகரைக் கட்டியெழுப்ப வேண்டும் என சிந்திக்கின்றனர், களமிறங்குகிறார்கள்.

சாலமோன் மன்னன் கட்டியதைப் போல ஒரு கோவிலைக் கட்டுவது என்பது சற்றும் சாத்தியமற்ற ஒன்று என்பது அவர்களுக்குப் புரிகிறது. எனவே சின்னதாய் ஒரு ஆலயம் கட்ட முடிவெடுக்கிறார்கள். அதுவே மாபெரும் பணியாக மாறிவிடுகிறது.

பலன் கொடுப்பதை மறந்திருந்த நிலமும், பணப் புழக்கம் இல்லாத சூழலும், எண்ணிக்கையில் குறைவான மக்களும் அவர்களுடைய சிந்தனைக்கு முட்டுக்கட்டை போட்டன.

இரண்டு வருட கட்டுமானத்தோடு ஆலயம் கைவிடப்படுகிறது. தாங்கள் நாட்டுக்குத் திரும்பியது தவறோ?, பாபிலோனிலேயே தங்கியிருக்க வேண்டுமோ?, கடவுளின் அருட்பார்வை இனிமேல் கிடைக்காதோ? என உடைந்து நொறுங்கினர் மக்கள்.

அந்த சூழலில் தான் ஆகாய் இறைவாக்கினர் பேசுகிறார். நம்பிக்கையூட்டும் மொழிகளையும், திருக்கோவிலைப் புதுப்பிக்க வேண்டியதன் தேவையையும் அவர் விளக்குகிறார்.

இறைவனிடமிருந்து பெற்ற இருபத்தாறு வார்த்தைகளை அவர் மக்களுக்கு அறிவிப்பதே இந்த நூலின் கட்டமைப்பு. இந்த நூல் வெறும் 2 அதிகாரங்களும், 38 வசனங்களும், 1131 வார்த்தைகளும் அடங்கிய சுருக்கமான நூல்.

பைபிளில் இறைவாக்குகள் பெரும்பாலும் கவிதை நடையில் தான் எழுதப்பட்டிருக்கும். காரணம் அவை இறைவனின் உணர்வுகளின் பிரதிபலிப்புகள். ஆனால் ஆகாய் இறைவாக்கினரின் வார்த்தைகள் உரைநடை வடிவில் இருப்பது ஒரு வித்தியாசம். ஒருவேளை, ‘இறைவன் உரைத்தவை என்பதை விட, உணர்த்தியவை என்பது’ பொருத்தமாய் இருக்கலாம்.

இறைவனுக்கும், இறைவனுடைய ஆலயத்துக்கும் நாம் முதன்மையான இடத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்காமல் இருக்கும் போது நமது வாழ்க்கை இறைவனின் ஆசீரை இழந்து விடும் என்கிறார் ஆகாய். ஆகாயின் வார்த்தைகளுக்கு மக்கள் சட்டென கீழ்ப்படிகிறார்கள். சில வாரங்களிலேயே ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஆரம்பிக்கின்றனர்.

இப்போது சாலமோனின் பழைய ஆலயத்தைப் பார்த்தவர்களுக்கு இந்த ஆலயம் ரொம்ப சின்னதாய் தெரிகிறது. அவர்கள் சோர்ந்து விடுகின்றனர். அவர்களை ஆகாய் ஊக்கப்படுத்துகிறார். ஆலயமே இல்லாமல் இருப்பதை விட, ஆலயம் சிறிதாய் இருப்பது மேலானது என உற்சாகப்படுத்துகிறார். கடவுளின் அருள் கூடவே இருக்கிறது என ஊர்ஜிதப்படுத்துகிறார்.

இறைவனே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எனும் அதிகபட்ச நம்பிக்கையை மக்களிடையே விதைக்கிறார். அசுத்தங்களை விலக்கி மக்கள் இறைபணியில் ஈடுபடவேண்டும் எனும் இறைவனின் சிந்தனையை மக்களிடம் விதைக்கிறார். செரூபாபேலின் அரசு அமையும் என வியப்பான ஒரு தீர்க்கதரிசனத்தையும் கொடுக்கிறார்.

செரூபாபேல் உண்மையில் அரசராகவில்லை. எனில், இறைவார்த்தை பொய்க்கவில்லை. இறைமகன் இயேசு அவரது வம்சாவழியில் வருவார் என்பதையே அந்த இறைவார்த்தை மறைவாய் உணர்த்தியது.

“இறைவனுக்கு ஏற்புடையவைகளையே முதலில் செய்ய வேண்டும், அனைத்தையும் தூய்மையாய்ச் செய்ய வேண்டும்” எனும் இரண்டு முக்கிய சிந்தனைகளை ஆகாய் நூலிலிருந்து படிப்பினைகளாய் நாம் பெற்றுக்கொள்ளலாம்.

சேவியர்
Tags:    

Similar News