உள்ளூர் செய்திகள்
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

காட்டுப்பன்றி கூட்டம் மோதி ஆட்டோ கவிழ்ந்து விபத்து- குழந்தை உள்பட 6 பேர் படுகாயம்

Published On 2022-04-17 10:38 GMT   |   Update On 2022-04-17 10:38 GMT
பண்ருட்டி அருகே காட்டுப்பன்றி கூட்டம் மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பனப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 28), கீழ்கவரப்பட்டைசேர்ந்த நதியா (35), தேஷ்மா (7), சுபித்ரா தேவி (19), அம்சவல்லி (25) ஆகியோர் ஆட்டோ ஒன்றில் பனப்பாக்கத்தில் இருந்து கீழ்கவரப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். ஆட்டோவை ஆதிமூலம் என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த ஆட்டோ பனப்பாக்க காலனியிலிருந்து சென்னை சாலைக்கு வரும் வழியில் வந்து கொண்டிருந்தது. அப்போது 10-க்கும் மேற்பட்ட காட்டுபன்றிகள் ஆட்டோவின் குறுக்கே பாய்ந்தது. இதில் நிலைதடுமாறி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனப்பாக்கம்,ஓரையூர், நல்லூர் பாளையம் பகுதிகளில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

விவசாய விளைநிலங்கள் காட்டு பன்றிகளால் பாழாகி வருகிறது. காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் வாகன ஓட்டி களை அச்சுறுத்துவதால் இரவு நேர போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.

வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News