செய்திகள்
அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, வாகனங்கள் அணிவகுத்து நின்றதை படத்தில் காணலாம்

ஓசூர் அருகே, மாநில எல்லையில் போக்குவரத்து நெரிசல்: 4 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரபரப்பு

Published On 2021-07-16 14:53 GMT   |   Update On 2021-07-16 14:53 GMT
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் சுமார் 4 கிலோமீட்டருக்கு அணிவகுத்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:

ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு வாகனங்களில் வரும் உள்ளூரை சேர்ந்த பிரமுகர்கள் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள், அவர்களிடம் கட்டணம் கேட்டாலும் செலுத்த மறுக்கின்றனர். இது சம்பந்தமாக இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது உண்டு.

அதேபோல் நேற்றும் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக சென்ற உள்ளூர் வாகனங்களை கட்டணம் செலுத்துமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் முற்றி நீண்டுகொண்டே சென்றதால், அத்திப்பள்ளி பகுதியில் இருந்து மூக்கண்டப்பள்ளி வரை சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

இதன் காரணமாக ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அத்திப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News