செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷா

பாஜக தேசிய தலைவர் கார் அணிவகுப்பு மீது தாக்குதல் - அமித்ஷா, ராஜ்நாத்சிங் கண்டனம்

Published On 2020-12-10 18:36 GMT   |   Update On 2020-12-10 18:36 GMT
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது நடந்த தாக்குதலுக்கு அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீதான தாக்குதலுக்கு அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் அராஜகம் பெருகி விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் டுவிட்டரில், மேற்கு வங்காளத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதையே இந்த தாக்குதல் பிரதிபலிக்கிறது. இதுபற்றி முழு விசாரணை நடத்தி, இதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் கூறுகையில், இந்த தூண்டிவிடப்பட்ட வன்முறை குறித்து அமைதியை விரும்பும் மாநில மக்களுக்கு மேற்கு வங்காள அரசு பதில் சொல்ல வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகத்தில், மேற்கு வங்காளத்தில் கொடுங்கோல், அராஜகம் அதிகரித்து விட்டது. அரசியல் வன்முறை, ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது கவலை அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
Tags:    

Similar News