செய்திகள்
கைதான கோகுல்ராஜ் மற்றும் முகமதுஅலி ஜின்னா.

கஞ்சா பழக்கத்தால் நேர்ந்த கொடுமை- சிறுமிகளுடன் பைக்கில் வந்த கோவை வாலிபர்கள்

Published On 2021-06-09 06:10 GMT   |   Update On 2021-06-09 06:10 GMT
டிக்டாக் மோகம் மற்றும் செல்போனில் அதிகநேரம் செலவிடுவதால் மாணவர்களின் எதிர்காலம் வழிதவறி போதைக்கு அடிமையாகும் சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்:

கோவை மாவட்டம் குடியலூரை சேர்ந்த தொழிலதிபர் கோவிந்தராஜ் மகன் கோகுல்(22). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. கோகுல் தனது நண்பர்களுடன் கஞ்சா மற்றும் மதுபழக்கத்திற்கு அடிமையாகி அதனை டிக்டாக் வீடியோவில் பதிவிட்டு வந்துள்ளார். அதன்மூலம் அந்த சிறுமியும் நட்புடன் பழகி பல இடங்களுக்கு பைக்கில் சுற்றி வந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டு தனது தோழியுடன் கோகுல்ராஜ் பைக்கில் வந்துள்ளார். இவர்களுடன் மேலும் ஒரு சிறுமி மற்றும் சிறுவன் பைக்கில் வந்துள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு திண்டுக்கல்லில் உள்ள நண்பர்களை பார்க்க வந்தனர்.

இதனிடையே தனது மகளை காணாமல் சிறுமியின் பெற்றோர் கோவை போலீசில் புகார் அளித்தனர். சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் கோகுல்ராஜ் மற்றும் நண்பர்களுடன் திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கோவை போலீசார் திண்டுக்கல்லில் முகாமிட்டு அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

திண்டுக்கல் அருகில் உள்ள மொட்டணம்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவரவே அங்கு சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அங்கு பதுங்கியிருந்த பேகம்பூரை சேர்ந்த முகமதுஅலிஜின்னா, கோகுல்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களுடன் இருந்த மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பிடிபட்ட அனைவரும் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் படித்து வருபவர்கள். கொரோனா ஊரடங்கு என்பதால் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் வெளியிடங்களுக்கு சுற்றி வந்துள்ளனர். இதில் அந்த சிறுமிகளுக்கும் போதை பழக்கம் ஏற்பட்டுள்ளது.


பெற்றோரிடம் இருந்து மறைக்கும் வகையில் ஆன்லைன் வகுப்பு செல்வதாகவும், தனது தோழியை பார்க்க செல்வதாகவும் கூறியுள்ளனர். ஆனால் தங்கள் குழந்தைகள் போதைக்கு அடிமையான விசயத்தை பெற்றோர்கள் கவனிக்க தவறியது எப்படி என்று போலீசார் வியப்படைந்துள்ளனர். பிடிபட்ட அனைவரையும் கோவையில் விசாரணை நடத்த அவர்கள் அழைத்துச்சென்றுள்ளனர்.

டிக்டாக் மோகம் மற்றும் செல்போனில் அதிகநேரம் செலவிடுவதால் மாணவர்களின் எதிர்காலம் வழிதவறி போதைக்கு அடிமையாகும் சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் வைத்திருந்த செல்போனில் புகைபிடிப்பது, மதுஅருந்துவது, தோழிகளுடன் நெருக்கமாக இருந்தது போன்ற புகைப்படங்களால் போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களுடன் தொடர்பில் உள்ள மற்ற நபர்களையும் கண்டறிந்து அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர் மூலம் கவுன்சிலிங் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News