பெண்கள் உலகம்
ஷாப்பிங் செய்யும்போது பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

ஷாப்பிங் செய்யும்போது பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

Published On 2022-01-27 04:27 GMT   |   Update On 2022-01-27 08:57 GMT
பெண்கள் ஷாப்பிங்கை சாதூரியமாக மேற்கொண்டால் தேவையற்ற பொருட்களை வாங்கி வீட்டில் குவிப்பதையும், பர்சில் இருக்கும் பணம் கரைவதையும் தடுக்கலாம்.
‘ஷாப்பிங்’ செய்வது பெண்களுக்கு ரொம்பவே பிடித்த விஷயம். கடை கடையாக ஏறி இறங்கி, ஹேர்பின் முதல் அப்போதுதான் அறிமுகமாகியிருக்கும் அழகுத் தோடு வரை வாங்கி ஆனந்தம் அடைவார்கள். வீட்டுக்கு வந்ததும் வாங்கிய பொருளையும், வீட்டில் ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பொருளையும் பார்த்தால் தான் தெரியும். தற்போது வாங்கி வந்திருக்கும் பொருட்களில் எத்தனை அவசியமில்லாதவை என்பது, ஷாப்பிங்கை சாதூரியமாக மேற்கொண்டால் தேவையற்ற பொருட்களை வாங்கி வீட்டில் குவிப்பதையும், பர்சில் இருக்கும் பணம் கரைவதையும் தடுக்கலாம்.

அதற்கான சில குறிப்புகள் இதோ...

1. ‘ஷாப்பிங்’ செல்வதற்கு முன்பாக என்னென்ன பொருட்களை வாங்கப் போகிறோம், அதற்காக எவ்வளவு தொகையை பட்ஜெட்டாக நிர்ணயித்திருக்கிறோம் என்பதை தெளிவாக திட்டமிட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட நாட்களாக ஆசையோடு கனவு கண்டு கொண்டிருக்கும் பொருள் திடீரென்று கண்ணில் பட்டுவிட்டால் உடனே அதை வாங்குவதற்கு மனம் துடிக்கும். அதை வாங்கும்போது ‘பட்ஜெட்’ தொகை அதிகரிக்கலாம். அதனால் தவறு ஒன்றுமில்லை. மற்ற பொருட்களை பட்ஜெட்டுக்குள் அடங்கும்படி பார்த்துக் கொள்வதுதான் நல்லது.

2. ‘ஷாப்பிங்’ செல்லும் முன்பு வாங்கப்போகும் பொருட்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இணையத்தில் தேடி பாருங்கள். ஏற்கனவே அந்த பொருளை வாங்கி இருப்பவர்களின் கருத்துக்களையும் பார்வையிடுங்கள். விலைவாசி விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் ‘பேஷன்’ இணையதளங்களை பார்வையிடலாம். அப்போதே என்ன வாங்கலாம் என்ற ‘ஐடியா’ கிடைத்து விடும். உங்களிடம் ஏற்கனவே உள்ள பொருட்களையும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். வாங்கியதையே மீண்டும் வாங்கி சேர்க்கவேண்டியிருக்காது. செலவையும் கட்டுப்படுத்திவிடலாம்.

3. எந்த பொருளையும் பார்த்த உடனேயே வாங்கிவிடாதீர்கள். கடைகளில் உள்ள எல்லா பொருட்களையும் மேலோட்டமாகப் பார்வையிடுங்கள். அதன் மூலம் ஒரு பொருளிலேயே எது நன்றாக இருக்கிறது? எந்தக் கடையில் மிகவும் விலை குறைவாக இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளலாம். பின்பு உங்களுக்கு பிடித்தமானதை வாங்கிக் கொள்ளலாம்.

4. கடைகளின் விற்பனையாளர்களுடன் நட்பை பேணுங்கள். அதன்மூலம் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி பொருட்களின் சிறப்பம்சங்களை எடுத்து கூறுவார்கள். புதிய பொருட்கள் அறிமுகமானால் உங்களுக்கு உடனே அறிமுகப்படுத்துவார்கள்.

5. அந்தந்த சீசனில் டிரெண்டிங்காக இருப்பவற்றை அதிகமாக வாங்காமல், எப்போதும் விரும்பி அணியக்கூடியவற்றை வாங்குங்கள்.

6. ‘ஷாப்பிங்’ போய்விட்டால் கைநிறைய பொருட்களை அள்ளி வர வேண்டும் என்றில்லை. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை, ‘ஷாப்பிங்’ சென்றுவிட்டீர்கள் என்பதற்காகவே செலவழிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மனசுக்குத் திருப்திகரமாக அமையாவிட்டால் அடுத்த முறை ஷாப்பிங் செய்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மாறுங்கள்.
Tags:    

Similar News