செய்திகள்
கைதான பாலசுப்பிரமணியனை படத்தில் காணலாம்.

தாராபுரம் அருகே வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

Published On 2021-03-06 09:42 GMT   |   Update On 2021-03-06 09:42 GMT
தாராபுரம் அருகே தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள், அரசியல் கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு சப்ளை செய்வதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் 15 கும்பம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை இன்ஸ் பெக்டர் விநாயகம் , சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த தொழிலாளி பால சுப்பிரமணியன் (வயது 55) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அப்பகுதி முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயம், சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்யப்பட்ட 400 லிட்டர் ஊறல்ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

தொடர்ந்து கைதான பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்திய போது ,தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள், அரசியல் கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு சப்ளை செய்வதற்காக காய்ச்சியதாக தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாலசுப்பிரமணியன் ஏற்கனவே கொரோனா காலக்கட்டத்தின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் கள்ளச்சாராயம் காய்ச்சி விநியோகம் செய்தார். அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.

Tags:    

Similar News