செய்திகள்
போலீசார் விசாரணை

பெண் வாடிக்கையாளர்களை மயக்கி ஆபாச வீடியோ- கைதான வங்கி காசாளரிடம் போலீசார் விசாரணை

Published On 2020-09-11 09:25 GMT   |   Update On 2020-09-11 09:25 GMT
பெண் வாடிக்கையாளர்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த வங்கி காசாளரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணப்பாறை:

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (வயது 35). புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்த இவருக்கும், தஞ்சை மாவட்டம் ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணமான நாளில் இருந்தே எட்வின் ஜெயக்குமார், தன் மனைவியுடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். தொடர்ந்து அவர் செல்போனிலேயே மணிக்கணக்காக மூழ்கி கிடந்ததோடு, மனைவி தாட்சர் குடும்பத்தாரிடம் 50 பவுன் நகை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தாட்சர், கணவரின் பீரோவை சோதனை நடத்தியதில் 10 செல்போன், லேப்டாப் சிக்கின. அந்த செல்போன்கள், லேப்டாப்பில் பல்வேறு பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் இருப்பது போன்ற 100 ஆபாச வீடியோ இருந்தது.

இதுதொடர்பாக தாட்சர், அப்போதைய தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனிடம் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் எட்வின் ஜெயக்குமார், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களுடன் தவறாக நடந்து கொண்டதும், அதை வீடியோவாக எடுத்து வைத்து ரசித்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து தஞ்சை போலீசார் எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அந்த வழக்கு தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இருந்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில் மதுரை ஐகோர்ட்டில் எட்வின் ஜெயக்குமார் ஜாமீன் பெற்றுக் கொண்டு குடும்பத்தோடு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி எட்வின் ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

இதில் எட்வின் ஜெயக்குமார் அவரது குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம், திருச்சி உய்யக்கொண்டான் திருமலை, இனாம்குளத்தூர், மணப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் மாறி மாறி பதுங்கி இருப்பதும், மேலும் அவர் 5 சிம்கார்டுகள் மூலம் அவ்வப்போது சிம்கார்டுகளை மாற்றி உறவினர்களிடம் பேசி வந்ததும் தெரிய வந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்து பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வந் தது தெரிந்தது.

இதை கண்டுபிடித்த தனிப்படை போலீசார் அந்த செல்போன் எண்களை சேகரித்து அவை காட்டும் டவரை வைத்தும் தேடி வந்தனர். இந்தநிலையில் ஒரு செல்போன் எண் திருச்சி சத்திரம் பகுதி டவரை காட்டியுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் டவர் காட்டிய ஒரு லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தியதில் அங்குள்ள ஒரு அறையில் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து அவரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வங்கிக்கு வந்த பெண் வாடிக்கையாளர்களை மயக்கியது எப்படி? எத்தனை பேரை மயக்கி ஆபாசமாக படம், வீடியோ எடுத்தார். ஆபாச படங்கள் ஏற்றிய லேப்டாப் மற்றும் சி.டி. ஹார்டு டிஸ்க் போன்றவற்றை எங்கு பதுக்கி வைத்துள்ளார். அவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டாரா? அல்லது கணினி, லேப்டாப்பில் பதிவேற்றி அவர் மட்டும் ரசித்தாரா? என தொடர்ந்து எட்வின் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அவர் வலையில் சிக்கி ஏமாற்றப்பட்ட பெண் வாடிக்கையாளர்கள் பீதியில் உள்ளனர்.
Tags:    

Similar News