செய்திகள்
சமூகவலைத்தளங்களில் வைரலாகும் காட்சி.

இறந்தவர்களின் உடலை குளத்தில் இறங்கி அடக்கம் செய்த கிராம மக்கள்

Published On 2021-01-16 08:26 GMT   |   Update On 2021-01-16 08:26 GMT
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே மரணம் அடைந்தவரது உடலை குளத்தில் இறங்கி மிகவும் சிரமப்பட்டு குளக்கரைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள செம்பாண்டாம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கான மயானம் அக்கிராமத்திலுள்ள குளத்து கரையில் அமைந்துள்ளது.

குளத்தின் வழியாக செல்லாமல் வேறு வழியில் செல்ல வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் தூரம் சென்றுதான் மயானத்தை அடையமுடியும். இதனால் மழையில்லாத காலத்தில் குறைவான தண்ணீர் செல்லும். அப்போது குளத்தில் இறங்கி கரையிலுள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் மழை பெய்து குளம் நிரம்பி 10 முதல் 15 அடி ஆழம் தண்ணீர் நிரம்பியுள்ள காலத்தில் மிகவும் சிரமப்பட்டே இறந்தவர்களின் உடலை பலரும் சுமந்தபடி தண்ணீரில் தவறி விழுந்து விடாமல் பாதுகாப்புடன் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மயானத்திற்கு செல்வதற்கு சிரமமாக இருப்பதால் அனைத்துக் காலங்களிலும் மயானத்திற்கு செல்வதற்கான மாற்றுப்பாதையை அமைத்துத் தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செம்பாண்டாம்பாளையத்தில் மரணம் அடைந்தவரது உடலை குளத்தில் இறங்கி மிகவும் சிரமப்பட்டு குளக்கரைக்கு கொண்டு செல்லும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவரது உடலை எவ்வித சிரமமின்றி அடக்கம் செய்வதற்கான மாற்று பாதை அமைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News