ஆன்மிகம்
திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றதை படத்தில் காணலாம்.

சீர்காழி பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2021-01-30 06:19 GMT   |   Update On 2021-01-30 06:19 GMT
சீர்காழி பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து கரகம், பால்குடங்கள், அலகு காவடி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் வாண வேடிக்கைகள், மேளதாளங்கள் முழங்க நான்கு வீதிகள் வழியாக பக்தர்கள் வலம் வந்தனர்.

தொடர்ந்து கோவிலை வந்து அடைந்த பின்னர் பத்ரகாளி அம்மனுக்கு இளநீர், பன்னீர், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு பச்சைக்காளி, பவளக்காளி நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

இதைபோல் திருக்கடையூர் ஆணைக்குளம் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு தைதிருவிழாவையொட்டி பாலாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பத்ரகாளியம்மன், மதுரை வீரன், முருகன், பெரியாச்சி, புற்றுஅம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடந்த 9 நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சுமார் 200-க்கு மேற்பட்ட பக்தர்கள் திருக்கடையூர் மஞ்சலாற்றங்கரையில் இருந்து கரகம், பால்குடம் எடுத்த கோவிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக பொருட்களான பால், தேன், தயிர், மஞ்சள், விபூதி, குங்குமம், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News