உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கொரோனா தொற்றாளர்களுக்கான சிறப்பு மையங்கள் தொடக்கம்

Published On 2022-01-13 09:27 GMT   |   Update On 2022-01-13 09:27 GMT
திருச்சியில் கொரோனா தொற்றாளர்களை வகைப்படுத்தும் சிறப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.


திருச்சி:

திருச்சி மாநகராட்சி பகுதியில் ராக்கெட் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி சுகாதாரத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
அரசு ஆஸ்பத்திரிகள் தவிர்த்து காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம் மற்றும் யாத்திரிநிவாசில் படுக்கைகள் அமைக்கப்பட்டு கொரோனா தற்காலிக மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதற்கிடையே கே.கே.நகர் அரசு பள்ளி, தென்னூர் மினி கிளினிக், அரியமங்கலம் கோட்ட அலுவலகம், மாநகராட்சி உருது பள்ளி ஆகிய இடங்களில் தொற்றாளர்களை வகைப்படுத்தும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு டாக்டர், ஒரு நர்சு மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருக்கும்.  

பரிசோதனையில் கொரோனா பாதிக்கப்பட்டு இருந்தால் அருகில் இருக்கும் மேற்கண்ட வகைப்படுத்தும் மையங்களுக்கு சென்று டாக்டரை பார்க்கலாம். அவர்கள் தொற்றாளர்களை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள்.

பின்னர்  வீட்டு தனிமையா? கொரோனா கவனிப்பு மையமா? என்பதை முடிவு செய்வார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டியிருந்தால் அவர்களே ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவித்து தொற்றாளரை அனுப்பி வைப்பார்கள்.

இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார நல அலுவலர் டாக்டர் யாழினி கூறும்போது, இந்த மையங்கள் தொற்றாளர்களுக்கு வழிகாட்டும் மையங்களாக இருக்கும். தொற்றாளர்களின் ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.  

இதில் நோய் அறிகுறி இல்லாத, இணை நோய்கள் இல்லாத தடுப்பூசி செலுத்தியவர்களை வீட்டு தனிமைக்கு அனுப்புகிறோம். லேசான அறிகுறி இருப்பவர்களை கொரோனா கவனிப்பு மையங்களுக்கு அனுப்புகிறோம். நோய் அறிகுறியுடன் இருப்பவர்களை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்கிறோம் என்றார்.

தடுப்பூசி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முகமது ஹக்கீம் கூறும்போது, தனிமை படுத்திக்கொள்பவர்களுக்கு வீடுகளில் டாய்லெட் வசதியுடன் கூடிய தனி அறை இருக்க வேண்டும். இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்வது நல்லது என்றார்.
Tags:    

Similar News