செய்திகள்
கோப்புப்படம்

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டி - அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற வாய்ப்பு

Published On 2020-10-18 18:44 GMT   |   Update On 2020-10-18 18:44 GMT
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். இதில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வாஷிங்டன்:

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (பிரதிநிதிகள் சபை) டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோரும், மேல்சபையில் (செனட் சபை) கமலா ஹாரிசும் (மொத்தம் 5 இந்திய வம்சாவளியினர்) எம்.பி.க்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் ‘சமோசா காகஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடக்கிற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன், நாடாளுமன்ற கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 தொகுதிகளுக்கும், மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும், 13 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலுக்கு பின்னர் தற்போது 5 எம்.பி.க்கள் உள்ள நிலையில் இன்னும் அதிக எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக தேர்வு ஆக வாய்ப்புகள் உள்ளன என தெரிய வந்துள்ளது.

டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி என்ற பெண் டாக்டர், அரிசோனாவில் 6-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய எம்.பி. டேவிட் ஸ்வெய்கெர்ட்டைவிட குறைந்த வித்தியாசத்தில் கருத்துக்கணிப்புகளில் முந்துகிறார்.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் முன்னாள் அதிகாரியான இந்தியவம்சாவளி பிரஸ்டன் குல்கர்னி, டெக்சாஸ் மாகாணத்தில் 22-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் டிராய் நெல்ஸ் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய பிரஸ்டன் குல்கர்னி, இந்த முறை வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேல்சபையான செனட் சபைக்கு மைனே மாகாணத்தில் இருந்து இந்திய வம்சாவளி பெண் சாரா கிதியோன், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவர் செல்வாக்கு மிகுந்த குடியரசு கட்சி எம்.பி. சூசன் காலின்சை எதிர்கொள்கிறார். சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்புகளில் எல்லாம் சாரா கிதியோன் முன்னிலை பெற்றிருப்பது அவர் வெற்றி பெறக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், குடியரசு கட்சி சார்பில் நியு ஜெர்சி மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு இந்திய வம்சாவளியான ரிக் மேத்தாவும், மங்கா அனந்தத் முலா வெர்ஜீனியா மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு குடியரசு கட்சி தரப்பிலும், நிஷா சர்மா, கலிபோர்னியாவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கும் போட்டி போடுகிறார்கள்.

தற்போதைய எம்.பி.க்களில் டாக்டர் அமி பெரா, கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். தொடர்ந்து 5-வது முறையாக களம் இறங்கி உள்ளார். குடியரசு கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சன் போட்டியிடுகிறார்.

ரோகன்னா, கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் மற்றொரு இந்திய வம்சாவளியான ரிதிஷ் தாண்டன் நிற்கிறார். ரோகன்னா முந்துகிறார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் 8-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கி உள்ளார். இது ஜனநாயக கட்சியின் கோட்டை. குடியரசு கட்சி வேட்பாளரையே நிறுத்தவில்லை. லிபர்டேரியன் கட்சி பிரஸ்டன் நெல்சனை நிறுத்தி இருக்கிறது.

பிரமிளா ஜெயபால், வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து களம் காண்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் இவரை குடியரசு கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லர் எதிர்த்து நிற்கிறார்.

எனவே இந்த முறை கூடுதலான எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News