செய்திகள்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

சாத்தான்குளம் வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் மனு- சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-05-13 09:26 GMT   |   Update On 2021-05-13 09:26 GMT
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தாக்கப்பட்டு இறந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., கடந்த ஆண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 2 வழக்குகளில், அதிகாரிகள் உள்பட 9 போலீஸ் அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.



அதில், ப.சிதம்பரத்திற்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில், ஜாமீன் வழங்குவதற்கான நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் வலியுறுத்தியுள்ளதாகவும், அதை ஐகோர்ட்டு மதுரை கிளை கருத்தில் கொள்ளாது, ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீதரின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், இது தொடர்பாக சிபிஐ மற்றும் தமிழக டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News