ஆன்மிகம்
நடையை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் தந்திரி கண்டரரு ராஜீவரு உள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது: இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி

Published On 2020-11-16 01:47 GMT   |   Update On 2020-11-16 01:47 GMT
மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது. இன்று முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி நடை திறப்பட்டு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதையொட்டி கேரளாவில் இருந்து மட்டுமின்றி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இவ்வாறு வரும் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந் தேதியும், மகர விளக்கு பூஜை 2021 ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது. இதற்காக நேற்று கோவில் நடை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு, புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தினசரி வழக்கமான அனைத்து பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெறும். தினசரி பூஜை இடைவேளைக்காக மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பின்னர் இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கனவே ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்து கொள்ள வேண்டும். தினசரி 1000 பக்தர்களும், சனி, ஞாயிறு நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல, மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 10 வயது முதல் 60 வயது வரையிலான பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தனி மனித இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். மட்டுமின்றி சானிடைசர் வைத்திருக்க வேண்டும்.

இந்த ஆண்டு, வடசேரிக்கரை-பம்பை, எருமேலி-பம்பை ஆகிய இரு வழிகளில் மட்டுமே பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சீசன் தொடங்குவதையொட்டி கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து, கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நிலக்கல் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து செயின் சர்வீஸ் மூலம் பக்தர்கள் பம்பைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டு உள்ளன.

இதனிடையே சபரிமலையில், தற்காலிக பணிக்காக வந்த 81 ஊழியர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், கீழ்சாந்தி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கொரோனா முதல் நிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Tags:    

Similar News