செய்திகள்
விதிகளை மீறி இயங்கிய பனியன் நிறுவனத்திற்கு அதிகாரிகள் அபராதம் விதித்த காட்சி.

திருப்பூரில் பனியன் நிறுவனங்களுக்கு அபராதம்

Published On 2021-06-08 07:21 GMT   |   Update On 2021-06-08 07:21 GMT
திருப்பூரில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடுதல் தொழிலாளர்களுடன் இயங்கிய பனியன் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்:

கொரோனா தடுப்பு முழு ஊரடங்கில்  திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில்  செயல்படும் பின்னலாடை  நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்கள் 10சதவீத தொழிலாளர்களுடன்   இயங்க லாம் என அரச அனுமதி அளித்தது.

குறிப்பாக ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கான வர்த்தக ஆணை, ஏற்றுமதிக்கான பணிகள், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும் நிறுவனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் 10சதவீத தொழிலாளர்களுடன் நேற்று முதல்  செயல்பட தொடங்கியுள்ளன. 

முன்னதாக நிறுவனங்களுக்கு வந்த தொழிலாளர்களுக்கு வெப்ப  பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டு  உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே விதிகளை பின்பற்றி  பின்னலாடை நிறுவனங்கள் இயங்குகிறதா? என்பதை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் பின்னலாடை நிறுவனங்களுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்தநிலையில் அங்கேரிபாளையம், பெருமாநல்லூர் சாலை ஆகிய பகுதிகளில் அரசின் உத்தரவை மீறி 10 சதவீதத்திற்கும் அதிகமாக தொழிலாளர்களை கொண்டு பனியன் நிறுவனங்கள் செயல்படுவதாக  கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது  3  நிறுவனங்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமான  தொழிலாளர்களை கொண்டு  செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து  அந்த நிறுவனங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கொங்கு பிரதான சாலையில் மற்றொரு  நிறுவனத்திற்கு  ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் திருப்பூர் பிச்சம்பாளையம் பகுதியில் தடையை மீறி செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்திற்கு அதிகாரிகள்  சீல் வைத்தனர்.
Tags:    

Similar News