செய்திகள்
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு- ராதாகிருஷ்ணன்

Published On 2021-02-21 07:04 GMT   |   Update On 2021-02-21 07:04 GMT
உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை:

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும் மகாராஷ்டிரா மற்றும் தென் மாநிலங்களில் என்440கே என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த உருமாறிய கொரோனா தமிழகத்தில் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் உருமாறி உள்ளது. இந்தியாவிலும் இது உருமாறி உள்ளதாக தகவல் வருகிறது. கொரோனா மட்டுமல்ல எந்த வைரசாக இருந்தாலும் உருமாறுவது வழக்கம்தான்.

ஆர்.என்.ஐ.நுண் கிருமிகள் மாதம் இரண்டு முறை உருமாறும். ஆனால் இந்தியாவில் உருமாறுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்களே தவிர அதற்கான புதிய சிகிச்சை மாற்றத்தை யாரும் அறிவிக்கவில்லை.

பொதுவாக வைரசிடம் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முககவசம் அணிவது தான் சிறந்த தடுப்பு நடவடிக்கையாகும்.

தமிழகத்தில் கொரோனா ஆரம்பத்தில் இருந்ததை விட படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டு குறைந்துவிட்டது. ஆனாலும் 500-க்கு கீழே குறைந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு இன்னும் படிப்படியாக குறையாமல் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

சென்னையில் ஒரு சிலர் முககவசம் அணிகின்றனர். ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் முககவசம் அணிவதை விட்டுவிட்டனர். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கூட மாஸ்க் அணியாமல் செல்வது தற்போது அதிகரித்து வருகிறது.

கொரோனா இனி நமக்கு வராது என்ற நினைப்பில் பலர் கவனக்குறைவாக உள்ளனர். அது தவறு. தற்போது தேர்தல் காலமாக உள்ளதால் பல நிகழ்ச்சிகள் கூட்டம், கூட்டமாக நடத்தப்படுகிறது.

யாருமே முககவசம் அணிவது இல்லை. செண்டை மேளம் அடிப்பவர்கள், நிகழ்ச்சிக்கு வந்து செல்பவர்கள் பலர் முகக்கவசம் அணியாமல் உள்ளதால் மீண்டும் கொரோனா அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிய வேண்டும்.

உருமாறிய கொரோனா தமிழகத்தில் உள்ளதா, இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் இதை தடுப்பதற்காக கண்காணிப்பு தீவிர மாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தமிழகத்திலும் நேற்று 438 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது 4 ஆயிரத்து 120 பேர் சிகிச்சையில் உள்ளனர். 460 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் 258 ஆய்வகங்கள் உள்ளன. எனவே யாருக்கேனும் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது. காய்ச்சல் வந்தால், 3 நாள் வரை பரிசோதிக்காமல் இருக்கும் பழக்கம் மீண்டும் பலரிடம் உள்ளது. இந்தநிலை மாற வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் குடும்பம் குடும்பமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளாததுதான்.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே வழிமுறைகள் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி கண்டிப்பாக முகக்கவசத்தை மீண்டும் அனைவரும் அணிய வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 16 லட்சத்து 70 ஆயிரத்து 470 டோஸ்கள் கைவசம் உள்ளன. இதில் கோவிஷீல்டு 14 லட்சத்து 80 ஆயிரத்து 500 டோஸ் மருந்துகளும், 1 லட்சத்து 89 ஆயிரத்து 920 கோவேக்சின் மருந்துகளும் உள்ளன.

இதில் சுகாதார பணியாளர்கள் 2 லட்சத்து 96 ஆயிரத்து 155 பேரும், வருவாய்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 43 ஆயிரத்து 876 பேரும், 30 ஆயிரத்து 581 போலீசாரும் ஆக மொத்தம் 3 லட்சத்து 76 ஆயிரத்து 612 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

பதிவு செய்தவர்களில் 55 சதவீதம் பேர்தான் தடுப்பூசி போட்டுள்ளனர். மற்றவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். எதற்காக தயங்குகிறார்கள் என்று புரிய வில்லை. கொரோனா வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் பலர் உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது தினசரி பாதிப்பு 500 பேருக்கு என்ற நிலை உள்ளது. கடந்த 2 வாரமாக இந்த எண்ணிக்கை குறையாமல் நீடித்து வருவது கவலை அளிக்கிறது. இது ஆபத்தான சூழ்நிலையாகும்.

எனவே மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க ஒவ்வொருவரும் முககவசம் அணியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News