செய்திகள்
பிரதமர் மோடி ஆலோசனை

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை விரைவாக அமைக்க மோடி உத்தரவு

Published On 2021-04-17 17:24 GMT   |   Update On 2021-04-17 17:24 GMT
ஒரு லட்சம் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அவை விரைவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 14ம் தேதிக்கு பிறகு தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டி பதிவாகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொளி வாயிலாக நடந்த இந்த ஆலோசனையின்போது, கொரோனா பரவலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆக்சிஜன் சப்ளை தொடர்பான பிரச்சினையை தீர்க்க, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவது துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். பி.எம்-கேர்ஸ் நிதியிலிருந்து 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 162 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படுகின்றன. 1 லட்சம் சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அவை விரைவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு மருந்துகளின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, இந்தியாவின் மருந்துத் துறையின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி பேசினார். ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளின் சப்ளை தொடர்பான தற்போதைய நிலையையும் அவர் ஆய்வு செய்தார். ரெம்டெசிவிர் தட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News