ஆன்மிகம்
சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஆபத்சகாயேஸ்வரர், குருபகவான், கலங்காமற்காத்த விநாயகர் அருள்பாலித்த காட்சி.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2020-11-16 03:35 GMT   |   Update On 2020-11-16 03:35 GMT
தனுசுராசியில் இருந்து மகரராசிக்கு குருபகவான் பிரவேசம் செய்ததையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. குருபரிகார தலமான இந்த கோவி தேவார பாடல் பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு குருபகவான் நேற்று இரவு 9.48 மணிக்கு பிரவேசம் செய்ததால் ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு முதல் கால யாகம் பூஜையும், இரவு 8 மணிக்கு பூர்ணாஹீதியும், பஞ்சமூர்த்திகள் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், காலை 7.45 மணிக்கு பூர்ணாஹீதியும், காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரபகவான் ஆகிய சன்னதிகளில் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கெஜலெட்சுமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் தெட்சிணாமூர்த்தி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதலே மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்கள் உள்பட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே குருப்பெயர்ச்சி விழாவில் ஒரு மணிநேரத்திற்கு 200 பேர் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பதிவு பற்றி தெரியாத வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்ததால் அவர்களின் நலன் கருதி நேரடி கட்டண தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

குருப்பெயர்ச்சி விழா ஹோமம். அபிஷேகம். மகா தீபாராதனை உள்ளிட்டவை யுடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பக்தர்கள் அர்ச்சனை பரிகார பூஜைகளில் நேரிடையாக கலந்து கொள்ள அனுமதிக்கபடவில்லை. குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோவில் தக்கார் ஹரிகரன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோவில் செயல்அலுவலர் பி.தமிழ்செல்வி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News