உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆபத்தான குழிகளால் உயிர்பலி அபாயம் - நீர் நிலைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா?

Published On 2021-12-08 08:26 GMT   |   Update On 2021-12-08 08:26 GMT
திருப்பூர் வேலம்பாளையம், பூமலூர், கோடங்கிபாளையம், சாமளாபுரம், இச்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
திருப்பூர்:

கோவை உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்கிறது. ஆற்றின் வழியோர குளங்கள் இந்த மழையால் நீர் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. 

மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும் நிலையில் உள்ள நொய்யல் ஆற்றில் மண் மேடுகள், ஆங்காங்கே ஆழமான குழிகள், முள் மற்றும் செடிகள் அதிகளவில் வளர்ந்து புதர்களாகவும் உள்ளன. இவற்றின் காரணமாக ஆற்றில் நீரோட்டம் சீராக இல்லாமல் இடத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது.

இதனால் ஆற்றுக்குள் இறங்கி நீந்துவது மற்றும் மீன் பிடிப்பது போன்ற செயல்கள் ஆபத்தாக முடியும் நிலை உள்ளது. ஆனால் பள்ளி மாணவர்களாக உள்ள சிறுவர்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் விளையாடி வருகின்றனர். எனவே பெற்றோர் உரிய வகையில் கண்காணித்து ஆற்றுக்கு செல்லும் சிறுவர்களைக் கண்டித்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

திருப்பூர் வேலம்பாளையம், பூமலூர், கோடங்கிபாளையம், சாமளாபுரம், இச்சிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த கல்குவாரிகள் பல புதுப்பிக்கப்படாததால் பயன்பாடின்றி விடப்பட்டன.

அவ்வாறு பயன்படுத்தாமல் விடப்பட்டவை பாறைக்குழிகளாக உள்ளன. அவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் துணி துவைக்க, குளிக்க என பயன்படுத்தி வருகின்றனர். அப்போது பாறைக்குழிகளின் ஆழம் தெரியாமல் குளிக்க சென்று பாறைகளின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் ஏராளம்.

தற்போது, தொடர்ந்து பெய்துவரும் பருவ மழையால் பாறைக்குழிகளில் நீர் நிரம்பி வருகின்றன. இதனால் ஆழம் தெரியாமல் பாறைக்குழிகளில் குளிக்க செல்பவர்கள் தண்ணீரில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே நடந்த விபத்துகளுக்கு பின்னும் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் பயன்படாத பாறைக்குழிகள் திறந்த நிலையிலேயே உள்ளன. எனவே அதிகாரிகள் இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி  உள்ளனர்.
Tags:    

Similar News