செய்திகள்
களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வில் ஈடுபட்ட காட்சி.

கொரோனா-திருப்பூர் கிராமங்களில் தீவிர கண்காணிப்பு

Published On 2021-06-09 10:09 GMT   |   Update On 2021-06-09 10:09 GMT
பனியன் நிறுவன அடையாள அட்டையுடன் வெளியில் சுற்றுபவர்களை போலீசார் கண்டறிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 2ஆயிரத்தை தாண்டி பதிவாகியது. இதனால் பொதுமக்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதனை கண்காணிக்க வேளாண்மைதுறை செயலாளர் சமயமூர்த்தி நியமிக்கப் பட்டார். தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் திருப்பூருக்கு வந்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திவிட்டு சென்றார்.

அதிகாரிகள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 2ஆயிரத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை படிப்படியாக  குறைய ஆரம்பித்தது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்  995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு  1000க்கு கீழ் வந்துள்ளது. 

மாவட்டம் முழுவதும் இதுவரை 70ஆயிரத்து 213 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர்.  இதில்  50ஆயிரத்து 659 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியாகினர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 585ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக கிராமப்புறங்களில் பரவல் அதிகம் உள்ளதால் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திருப்பூர் வந்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி விட்டு சென்றார். தற்போதைய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வருவது பொதுமக்கள்-அதிகாரிகள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் தற்போது மளிகை-காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதால்  தேவையின்றி  பலர் வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். பனியன் நிறுவனங்கள் 10சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் விதிகளை மீறி பனியன் நிறுவன அடையாள அட்டை யுடன் சாலைகளில்  உலா வருகின்றனர். அவர்களை போலீசார் கண்டறிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதுதொற்று பரவலுக்கு வழிவகுத்துவிடும் என்பதால் அதனை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Tags:    

Similar News