ஆன்மிகம்
முப்பெரும் தேவியர்

முப்பெரும் தேவியர்- மலைமகள், அலைமகள், கலைமகள்

Published On 2021-10-15 05:52 GMT   |   Update On 2021-10-15 05:52 GMT
நவராத்திரியில் முப்பெரும் தேவியரை பூஜித்து இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எல்லா நலமும், வளமும், ஞானமும் அருள வேண்டுவோம்.
மலை மகளான துர்கை, அலை மகளான லட்சுமி மற்றும் கலை மகளான சரஸ்வதி ஆகிய மூவரையும் போற்றிக் கொண்டாடும் விழாவே நவராத்திரித் திருவிழாவாகும். இவர்கள் மூவரையும் ஆதிசக்தியின் வடிவங்களாக நாம் வணங்குகிறோம்.

* ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரிப் பண்டிகையின் முதல் மூன்று நாட்கள் உக்கரமான துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் மென்மையான லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் ஞானத்தின் வடிவான சரஸ்வதிக்கும் ஒதுக்கப்பட்டு மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுகின்றது. துர்கையை-மகேஸ்வரி, கௌமாரி, வராகியாக முதல் மூன்று நாட்களிலும், லட்சுமியை- மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாக அடுத்த மூன்று நாட்களிலும், சரஸ்வதியை- சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாக கடைசி மூன்று நாட்களிலும் வழிபடுகின்றோம்.

* நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை, பரமேஸ்வரியின் அம்சங்களான நவ துர்க்கைகளையும் வேண்டி வீரத்தையும், தைரியத்தையும் பெற வேண்டும். முதல் ராத்திரியின் போது சக்தியை மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் சர்வ மங்கள ரூபிணியாக அவள் நமது இல்லங்களில் கொலு வீற்றிருப்பாள்.

* இரண்டாவது ராத்திரியின் போது அன்னைக்கு ஆபரணங்களை அணிவித்து வழிபட்டால் அவள் சர்வ பூரண பூஜிதமாக அருள் பாலிப்பாள்.

* மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சக்தியானவள் மூன்றாவது ராத்திரி நாம் செய்யும் பூஜைகளுக்கு மனமகிழ்ந்து மனவலிமையையும், உடல் திடத்தையையும் வழங்குகிறாள்.

* நவராத்திரியின் இடைப்பட்ட மூன்று நாட்கள் லட்சுமியையும், அவர் வடிவாகத் திகழும் ஆதி லட்சுமி, சந்தான லட்சுமி, வீரலட்சுமி, விஜய லட்சுமி, கஜலட்சுமி, தானிய லட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமியையும் வணங்கி அருள் பெற்றிட வேண்டும்.

* பணம், பொருள், புகழ் என சகல செளபாக்கியங்களையும் பெற மகாலட்சுமியின் வடிவங்களை பூஜித்து வணங்க வேண்டும்.

* நவராத்தியின் கடைசி மூன்று நாட்கள் சாந்தமும், சாத்வீக குணமும் பொருந்திய சரஸ்வதியின் அம்சங்களான வாசீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்காக கொண்டாடப்படுகின்றது.

* கல்வியறிவையும், ஞானத்தையும் வழங்கும் அஷ்ட சரஸ்வதியை நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் வழிபட்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர். பிரம்மதேவர் வேதங்களை சரஸ்வதியை வணங்கிய பின்னரே உருவாக்கினாராம்.

* இந்த ஒன்பது நாட்களிலும் பகலில் சிவபெருமானுக்கும், இரவில் அம்பிகைக்கும் பூஜை செய்ய வேண்டும் என்று ஒதுக்கியுள்ளனர்.

* பண்டைய காலத்தில் போர்புரிய சில சட்ட தர்மங்களைக் கையாண்டனர். பகலில் போர்புரிந்து விட்டு இரவில் அன்று நடந்தவற்றை ஆராய்ந்து மறுநாள் செய்வதற்கான வேலைகளைத் திட்டமிட்ட பின்னர் களைப்பு நீங்கி உற்சாகமடைய ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் இது போன்று பண்டைய நாட்களில் நடந்தவற்றையே நாம் இப்பொழுது நவராத்திரித் திருவிழவாகக் கொண்டாடுகிறோம்.

* இந்த ஒன்பது நாட்களும் பராசக்தியானவள் கன்னிப்பெண் வடிவில் அவதரிக்கிறாள். பராசக்தி அசுரனை எதிர்த்து போர்புரிந்த போது அனைவரும் பொம்மையைப் போல் சிலையாய் நின்றதை நினைவு கொள்ளும் வகையில் நாம் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை வைக்கிறோம் என்று புராணங்கள் கூறுகின்றன.

* கொலுப்படியில் முதல் படியானது ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி, மரம் போன்ற பொம்மைகளுக்கானதாகும்.

* இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட உயிரின பொம்மைகளும், மூன்றாம் படியில் மூன்றிவு கொண்ட உயிரின பொம்மைகளும், நான்காம் படியில் நான்கறிவு கொண்ட உயிரின பொம்மைகளும் வைக்கப்டுகின்றன.

* ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் மற்றும் பறவை பொம்மைகளும், ஆறாம் படியில் சிந்திக்கும் சிரிக்கும் ஆறறிவு கொண்ட மனிதர்களின் பொம்மைகளும், ஏழாம் படியில் மனித நிலையில் இருந்து உயர்ந்த சித்தர்கள், ரிஷிகள் மற்றும் மகான்களின் உருவ பொம்மைகளும் வைக்கப்படுகின்றன.

* எட்டாம் படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலகர்கள், நவக்கரக நாயகர்கள் மற்றும் தேவதைகளின் உருவ பொம்மைகளும், கடைசியானதும் உயர்ந்த நிலையில் உள்ளதுமான ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், முப்பெரும் தேவியர்கள் ஆகியோரது பொம்மைகளை வைத்து இவர்களுக்கு நடுநாயகமாக ஆதிபராசக்தியின் உருவ பொம்மையை வைக்கிறார்கள்.

* மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலைய அடைய வேண்டுமென்ற பொருள்படும் விதத்தில் இந்த ஒன்பது கொலுப்படியின் தத்துவம் அமைந்துள்ளது.

* நவராத்திரியில் முப்பெரும் தேவியரை பூஜித்து இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எல்லா நலமும், வளமும், ஞானமும் அருள வேண்டுவோம்.
Tags:    

Similar News