ஆன்மிகம்
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 11-ந்தேதி ஆரத்தி வழிபாடு

Published On 2019-11-22 05:54 GMT   |   Update On 2019-11-22 05:54 GMT
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆரத்தி வழிபாடு வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
காசியில் கங்கை நதிக்கு தினமும் மாலையில் ஆரத்தி வழிபாடு நடைபெறும். இதேபோல் ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் நடத்தப்படும். புண்ணிய நதிகளான கங்கை மற்றும் காவிரியில் நடைபெறுவது போல கன்னியாகுமரியில் முக்கடல் சங்கம கடற்கரையில் ‘பாரத் ஆரத்தி‘ என்ற நிகழ்ச்சியை நடத்த விசுவ இந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது.

வருகிற 11-ந் தேதி மாலை 6 மணிக்கு இதற்கான தொடக்கவிழா கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோகிதர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் கடற்கரையில் கைகளில் பெரிய ஆரத்தி தட்டுடன் நின்றபடி கடலுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு நடத்துவார்கள். அன்று முதல் தினமும் பாரத் ஆரத்தி வழிபாடு தொடர்ந்து நடைபெறும்.

இது தொடர்பாக தென் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் பெரி.குழைக்காதர் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், உலக நன்மைக்காக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொள்கிறார். மேலும் மத்திய மற்றும் மாநில சுற்றுலாத்துறை மந்திரிகள், விசுவ இந்து பரிஷத் அகில இந்திய பொது செயலாளர் மலன்பிராந்தே, மற்றும் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சாதுக்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆரத்தி வழிபாடு வருகிற 11-ந் தேதி முதல் தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும் என்றார்.

பேட்டியின் போது விசுவ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் சேதுராமன், கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன், மாவட்ட விசுவ இந்து பரிஷத் இணை செயலாளர் சக்திநாராயணன், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் ராம்கி ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News