செய்திகள்
மண்எண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த விவசாயி மற்றும் குடும்பத்தினரை படத்தில் காணலாம்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு

Published On 2021-02-20 12:03 GMT   |   Update On 2021-02-20 12:03 GMT
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 69), விவசாயி. இவரது மனைவி அமுதா (59). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மனோகரன் தனது மனைவி மற்றும் மகன்கள் அருண்குமார், சரவணன், மகள் ரெஜினா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தின் அருகில் அமர்ந்து இருந்தனர்.

அவர்களை கண்டு சந்தேகமடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 7 பாட்டில்களில் மண்எண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரிடம் அடமானம் வைத்து பணம் பெற்றோம்.

அந்த நபர் நிலத்தை அடமான பத்திரம் எழுதுவதாக கூறிவிட்டு தங்களுக்கு தெரியாமல் கிரைய பத்திரமாக எழுதி கொண்டு தற்போது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் குடும்பத்துடன் தீக்குளிக்க வந்ததாகவும், மேலும் தங்களது நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டரிடம் முறையிட வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை மேலும் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News