செய்திகள்
தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடி காணப்படும் 16 கண் மதகு பகுதி.

மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2021-11-29 10:11 GMT   |   Update On 2021-11-29 10:11 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 16 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அணைகள், ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

ஒகேனக்கல்லில் தற்போது 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 13-ந் தேதி நள்ளிரவு மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது. அணை நிரம்பியதை அன்று நள்ளிரவு முதல் அணையின் உபரி நீர் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்டு வந்தது.

அணைக்கு வரும் நீர்வரத்து பொருத்து அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்தும் குறைத்தும் மாறிமாறி திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து குறைந்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

இதையடுத்து அணையை ஒட்டி அமைந்துள்ள நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேநேரத்தில் கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது.

நேற்று நள்ளிரவு முதல் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 16 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது.



Tags:    

Similar News