செய்திகள்
புகார்

உள்ளாட்சி தேர்தல் விதி மீறல்- 285 புகார்கள் பதிவு

Published On 2021-09-25 09:56 GMT   |   Update On 2021-09-25 09:56 GMT
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விதிமுறை மீறல் நடைபெற்றால் புகார் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.
சென்னை:

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் பல் வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விதிமுறை மீறல் நடைபெற்றால் புகார் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.

இந்த புகார்களை பெறுவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய எண்கள் மூலம் அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மையத்தில் உள்ளாட்சி தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக அரசியல் கட்சியினர், பொது மக்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் புகார்களை அளித்து வருகின்றனர்.

கடந்த 15-ந்தேதி முதல் இந்த மையம் செயல்பட தொடங்கியது. அன்று முதல் நேற்று வரை இந்த மையத்தில் 285 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த புகார்களுக்கு உரிய விளக்கங்கள், தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. புகார்களின் தன்மைக்கு ஏற்ப அவை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அந்த புகார்களின் உண்மை தன்மையை கண்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை இந்த புகார் மையம் தொடர்ந்து செயல்படும். அதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து புகார் அளிக்கலாம்.
Tags:    

Similar News