ஆன்மிகம்
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தொடங்கியது

Published On 2020-08-24 08:37 GMT   |   Update On 2020-08-24 08:37 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா எளிய முறையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமை பதி உள்ளது. இங்கு வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் எளிய முறையில் தொடங்கியது. கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் குறைந்த அளவு பக்தர்கள் மட்டுமே கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிட்டு திருநடை திறத்தல், அய்யாவுக்கு பணிவிடை, 5 மணிக்கு கொடிபட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து கொடியேற்றம் போன்றவை நடந்தன. பால பிரஜாபதி அடிகளார் கொடியை ஏற்றி வைத்தார். மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும் நடைபெற்றது.

இன்று (சனிக்கிழமை) இரண்டாம் திருவிழா நடக்கிறது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பு, தொடர்ந்து தலைமைப்பதியின் உள்பகுதியில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும் சமூக இடைவெளியுடன் எளிய முறையில் நடைபெறும். வருகிற 28-ந் தேதி எட்டாம் திருவிழாவும், 31-ந் தேதி 11-ம் திருவிழாவும் நடைபெறும்.
Tags:    

Similar News