உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின்

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஏமாற்றம் அளிக்கிறது- பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Published On 2022-01-17 13:15 GMT   |   Update On 2022-01-17 13:15 GMT
கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்றும், பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

Tags:    

Similar News