செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

புதுவையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

Published On 2021-05-01 04:07 GMT   |   Update On 2021-05-01 04:16 GMT
புதுவையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?, புதிய முதல்-அமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. ஓரணியாகவும் மற்றும் அ.ம.மு.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், சுயேச்சைகள் என 324 பேர் போட்டியிட்டனர்.

ஆனால், தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவியது. புதுவையில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக செயல்பட்டது.

இதற்காக பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், நிதின்கட்கரி, அர்ஜூன்ராம்மெக்வால், பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா ஆகியோர் புதுவையில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் தரப்பில் மேலிட தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, வீரப்பமொய்லி, தினேஷ்குண்டுராவ், சஞ்சய்தத், பல்லம் ராஜூ உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ரோடியர் மில் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.



காங்கிரஸ் தரப்பில் மத்திய பா.ஜனதா அரசின் பாராமுகம், கவர்னரின் தடைகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்தனர். தடைகளை மீறி எண்ணற்ற நலத்திட்டங்களை 85 சதவீதம் நிறைவேற்றி இருப்பதாக பிரசாரம் செய்தனர்.

பா.ஜனதா தரப்பில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைந்தால் புதுவை வளர்ச்சி பெறும். சிறந்த புதுவையை உருவாக்குவோம் என கோ‌ஷத்தையும் முன் வைத்தனர்.

புதுவை மக்கள் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு உங்கள் கோரிக்கை, எங்கள் வாக்குறுதி என தேர்தல் அறிக்கையை பா.ஜனதா தயாரித்து வெளியிட்டது. இருதரப்பும் மக்களை கவரும் வகையில் பல்வேறு யுக்திகளை கையாண்டனர்.

மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், புதிதாக ஆட்சியை அமைக்க பா.ஜனதாவும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இரு தரப்பிலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என அறிவிக்கப்படவில்லை.

காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ? அந்த கட்சிக்கே முதல்-அமைச்சர் பதவி என்ற பேச்சு எழுந்துள்ளது.

அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி முதல்-அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள்? என பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தெரிவித்துள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் புதுவையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? புதிய முதல்-அமைச்சர் யார்? என்பது நாளை இரவு தெரிய வரும்.

Tags:    

Similar News