செய்திகள்
கர்நாடக அரசு பூங்காவில் மலர் செடிகள் நடவு

கர்நாடக அரசு பூங்காவில் கோடை சீசனுக்காக 6 லட்சம் மலர் செடிகள் நடவு

Published On 2021-02-22 08:52 GMT   |   Update On 2021-02-22 08:52 GMT
கர்நாடக அரசு பூங்காவில் கோடை சீசனுக்காக 6 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி பெர்ன்ஹில் பகுதியில் கர்நாடக அரசின் ஸ்ரீ தோட்டக்கலை பூங்கா இயங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, மலை சரிவான பகுதியில் இயற்கை எழில் சூழ பரந்து விரிந்து உள்ளது. பூங்காவில் புல்வெளி தோட்டம் அழகிய கலையோடு அமைக்கப்பட்டு இருக்கிறது. மலர்கள் கொட்டுவது போன்று அமைக்கப்பட்ட மலர் அருவி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. சங்கன் கார்டன் திறந்த அரங்கு போல் அமைந்து உள்ளது. இத்தாலியன் பூங்கா 15-ம் நூற்றாண்டில் ரோம் மற்றும் பிளாரன்ஸ் நகரில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட பூங்காக்களை போல் அமைந்து இருக்கிறது.

பிரம்மை சங்கா வளைந்து, நெளிந்து செல்லும் சிக்கலான பாதைகளை கொண்டது. சாம்பிராணி செடிகளை சுவர் போல் செய்து வடிவமைத்து, உள்ளே சென்றால் எந்த வழியாக வெளியே வரவேண்டும் என்பதுகூட தெரியாத வகையில் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கிறது.

இதற்கிடையே வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெற இருக்கிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் 6 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. மண்ணை பதப்படுத்தி உரமிட்டு பணியாளர்கள் நடவு செய்து வருகின்றனர்.

ஆர்கிட், சைக்ளோமன், ரெனன்குலஸ், டியூபெரஸ் பிகோனியா, கெளஞ்சியா, ரெக்ஸ், கிரைசாந்திமம், கேக்டஸ், ஜினியா, சால்வியா, பிட்டோனியா, மேரிகோல்டு உள்பட 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நர்சரி, கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக 2 லட்சம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

உறைபனியால் மலர் செடிகள் பாதிக்காமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நர்சரியில் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். நடவு செய்யப்பட்ட செடிகளில் ஏப்ரல் மாதத்தில் மலர்கள் பூக்கத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News