இந்தியா
12 ஆண்டுகளில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்வு

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 12 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்வு

Published On 2022-01-12 09:49 GMT   |   Update On 2022-01-12 09:49 GMT
கடந்த 2010 முதல் 2021-ம் ஆண்டு வரை அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

ஒவ்வொரு பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலின் போது புதிய கட்சிகள் உருவாகுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெறும் அளவுக்கு தேர்தலில் போதிய அளவு வாக்குகளை பெற வேண்டும்.

இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தும், தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் அங்கீகரிக்கப்படாத கட்சிகளாகக் கருதப்படுகின்றன.

இந்த நிலையில் கடந்த 2010 முதல் 2021-ம் ஆண்டு வரை அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர்ந்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏ.டி.ஆர்.) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 1,112 ஆகவும், 2019-ம் ஆண்டு 2,301 ஆகவும் இருந்தது. இது 2021-ம் ஆண்டு 2,858 ஆக அதிகரித்துள்ளது.

2013- 2017-ம் ஆண்டு 18 சதவீதமும், 2018- 2019-ம் ஆண்டு 9.8 சதவீதத்துக்கு அதிகமாக இந்த கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. இந்த 5 மாநிலங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 889 ஆக உள்ளது. 
Tags:    

Similar News