செய்திகள்
கோப்புபடம்

தாய்-மகனை கொல்ல முயற்சி: 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-11-19 10:48 GMT   |   Update On 2020-11-19 10:48 GMT
புதுச்சத்திரம் அருகே தாய்- மகனை கொலை செய்ய முயன்ற வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள கல்யாணி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 55). விவசாயி. இவரது மனைவி பர்வதம் (50). இவர்களுக்கு மோகன்குமார் (21) என்ற மகன் உள்ளார். திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு பழனிவேலின் தந்தை இளையப்ப கவுண்டருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பார்க்க பர்வதம் மற்றும் அவரது மகன் மோகன்குமார் ஆகிய இருவரும் சென்றனர். அப்போது 2 ஏக்கர் நிலம் கொடுத்தால் இங்கேயே தங்கி விடுகிறோம் என அவர்கள் கூறி உள்ளனர். இதில் பழனிவேல் குடும்பத்தினருக்கும், பர்வதத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பழனிவேல், அவரது சகோதரர்கள் ராமசாமி, ரத்தினவேல், பூபதி ஆகியோர் பர்வதம் மற்றும் அவரது மகனை இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி, ரத்தினவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பழனிவேல், ராமசாமி ஆகிய இருவரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் கூடுதல் சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் நாகராஜன் வாதாடினார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி ஸ்ரீவித்யா குற்றம்சாட்டப்பட்ட பழனிவேல், ராமசாமி, ரத்தினவேல் ஆகிய 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.2,500 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூபதி இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News