செய்திகள்
வாக்காளர் பட்டியல்

வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்- இன்றும், நாளையும் நடக்கிறது

Published On 2020-11-21 06:29 GMT   |   Update On 2020-11-21 06:29 GMT
வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
கரூர்:

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம்(தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந்தேதி வெளியிடப்பட்டு கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகியவற்றில் பொதுமக்களின் பார்வைக்காக அடுத்த மாதம்(டிசம்பர்) 15-ந்தேதி வரை வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்றும்(சனிக்கிழமை), நாளையும்(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் தங்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 2021 ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர்களாக பதிவு செய்யத் தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் VoterHelpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News