செய்திகள்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் நடிகர் விவேக்.

விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?

Published On 2021-04-18 02:09 GMT   |   Update On 2021-04-18 02:09 GMT
அப்துல் கலாம் சொன்ன வார்த்தையை மறக்காமல், பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார் நடிகர் விவேக்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்டவர் நடிகர் விவேக் என்பது அனைவரும் அறிந்ததே.

‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளதே அதற்கு சான்று.

அப்துல் கலாமுடன் விவேக் பலமுறை உரையாடி இருக்கிறார். அப்துல் கலாம் தன் குடும்பத்தினரிடம் விவேக் குறித்து கூறி இருக்கிறார். அவ்வாறு கூறிய வார்த்தைகள் என்ன? என்பது குறித்து அப்துல் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் நம்மிடம் கூறியதாவது:-



என் சித்தப்பா அப்துல் கலாம் ராமேசுவரத்துக்கு ஒருமுறை வந்திருந்த போது நடிகர் விவேக் பற்றி என்னிடம் பேசினார்.

விவேக்கை தெரியுமா? என கேட்டார். அதற்கு, தெரியும்; அவரது நகைச்சுவை நன்றாக இருக்கும் என அவரிடம் தெரிவித்தேன்.

அதற்கு அப்துல் கலாமோ, “விவேக் நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. சிறந்த சமூக ஆர்வலர். மரக்கன்றுகளை நட வேண்டும் என ஒரு வரிதான் அவரிடம் அதுவும் ஒருமுறைதான் சொன்னேன். அதை ஏற்றுக் கடைப்பிடித்து தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நல்லபிள்ளை” என என்னிடம் தெரிவித்தார்.

அப்துல் கலாம் சொன்ன வார்த்தையை மறக்காமல், பசுமை கலாம் என்ற அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுள்ளார். அவர் நட்டு வைத்த ஒவ்வொரு மரத்திலும் ஒவ்வொரு விவேக் வாழ்ந்து வருவது போல் தான் உணர்கிறேன். நல்லவர்களை கடவுள் வேகமாக அழைத்து விடுகிறார். நடிகர் விவேக் மரணம் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் பாதித்தது போல் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதிகமாக பாதித்துள்ளது.

எனது தந்தையின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ராமேசுவரத்திற்கு வந்து விவேக் கலந்து கொண்டார். அப்போதும் அவர் மரக்கன்று ஒன்றை நட்டுவிட்டுச் சென்றார். எங்கள் குடும்பத்தில் ஒருவராகத்தான் அவர் வாழ்ந்து வந்தார் என்பதே உண்மை.

இவ்வாறு உருக்கமுடன் நசீமா கூறினார்.
Tags:    

Similar News