ஆன்மிகம்
அத்திவரதர்

அத்திவரதரை காண மக்கள் ஆர்வம் காட்டியதற்கு காரணம்

Published On 2019-08-17 08:37 GMT   |   Update On 2019-08-17 08:37 GMT
அத்திவரதரை காண தமிழக மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதற்கு இது மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி பல காரணங்கள் உள்ளது.
பத்தி முதலா மவற்றிற் பதியெனக்குக் கூடாமல்
எத்திசையு முழன்றோடி இளைத்துவிழுங் காகம் போல்
முத்திதரு நகரேழில் முக்கிய மாங்கச்சி தன்னில்
அத்திகிரியருளாளர்க் கடைக்கலம் நான்புகுந்தேனே

அத்திவரதர் எனும் திருநாமம் உலகத் தமிழர்களின் உதடுகளில் மட்டும் உச்சரிக்கப்படவில்லை. உள்ளத்திலும் புகுந்து குடி கொண்டு விட்டது. பெருமாளுக்கு எத்தனையோ திருநாமங்கள் உள்ளன. அவற்றில் ரங்கநாதர், ஏழுமலையான், வரதராஜ பெருமாள் ஆகிய மூன்று பெயர்களும் பிரதானமானவை. இதில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாளின் மறு பிரதிபலிப்பு திருநாமமாக இருப்பது அத்திகிரி வரதர். சுருக்கமாக அத்திவரதர் என்கிறார்கள். இன்று தமிழகத்தில் எந்த திசையில் சென்றாலும் “அத்தி வரதரை தரிசனம் செய்து விட்டீர்களா?” என்ற கேள்வியும், விசாரிப்பும்தான் முதலிடம் பிடித்துள்ளது.

இதனால் அத்திவரதர் எனும் திருநாமம் தமிழ்நாடு முழுவதும் பேரலையாக எழுந்துள்ளது. அலைகள் ஓய்ந்ததாக வரலாறே இல்லை. அது போலதான் அத்திவரதர் திருநாம எழுச்சி அலையும் ஒரு நாளும் ஓயப் போவது இல்லை. அத்திவரதர் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மனக் கிளர்ச்சியும், மகிழ்ச்சியும், உணர்ச்சியும், எழுச்சியும் சாதாரண விஷயம் அல்ல. தமிழர்கள், தமிழ்மொழியின் பண்பாட்டு பிரதிபலிப்பு எழுச்சியின் மறு வடிவமாகவே இதை சான்றோர்களும், ஆன்றோர்களும் பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இன்று தமிழ் மொழி செம்மையாக செழித்து, ஆழமாக வேரூன்றி நிற்பதற்கு ஆழ்வார்களும், நாயன்மார்களும் செய்துள்ள பணியே அடிப்படையாக உள்ளது. அவர்கள் ஆன்மிகத்தோடு, தமிழர்களுக்கு வாழ்வியல் சிறப்புகளை உணர்த்தி சென்றுள்ளனர். அந்த சிறப்பின் தொடர்ச்சிதான் தற்போது அத்தி வரதருக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியாகும்.

இந்த உண்மை அரிச்சுவடியை உணராமல், 40 ஆண்டுகள் தண்ணீருக்குள் இருந்து விட்டு வந்தவர் என்பதால் அத்திவரதரை காண மக்கள் லட்சம், லட்சமாக குவிந்து விட்டார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறி வருகிறார்கள். அத்திவரதரை காண தமிழக மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியதற்கு இது மட்டுமே காரணம் அல்ல. அதையும் தாண்டி பல காரணங்கள் உள்ளது.

அதில் முதன்மையானது- தமிழகம் ஆன்மிக பூமி என்பதுதான். உலகிலேயே இந்து கடவுள்களுக்கும், இந்து மக்களுக்கும், இந்து பண்பாட்டுக்கும் மூலமாக இருப்பது தமிழகம்தான். தமிழ்நாட்டில்தான் உலகை மாற்றிய சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் அதிகம் வாழ்ந்துள்ளனர். இன்றும் சித்தப் புருஷர்களின் சொர்க்கப் புரியாக தமிழகம் திகழ்கிறது. உலகம் முழுக்க வாழும் ஆய்வாளர் கள் இதை ஒத்துக் கொள்கிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் நிறைந்த புண்ணிய பூமியான தமிழகத்தில் இந்துக்களின் பாரம்பரிய மகிமையை உணர்த்தும் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என்றால் மக்கள் சும்மா இருப்பார்களா? அந்த பாரம்பரிய மகிமையின் மகத்துவத்தை கண்டு பலனை பெற வேண்டும் என்று ஆர்ப்பரித்து வரத்தானே செய்வார்கள். அந்த அழகான ஆர்ப்பரிப்பைத்தான் காஞ்சீபுரத்தில் கடந்த 47 நாட்களாக நாம் பார்த்தோம்.

முதல் சில நாட்கள் சயனக் கோலத்தில் இருந்த அத்திவரதரை சராசரியாக தினமும் 1 லட்சம், 1.5 லட்சம் பேர் தரிசனம் செய்து வந்தனர். ஒரு வாரத்துக்குப் பிறகு பக்தர்கள் வருகை அலை, அலையாக அதிகரித்தது. ஒரு லட்சம் 2 லட்சமாக மாறியது. பிறகு 2 லட்சம் 3 லட்சமாக உயர்ந்தது. அப்போதுதான் அரசு நிர்வாகம் திணறும் நிலை ஏற்பட்டது. அத்திவரதரை எந்தவித சிரமும் இல்லாமல் சிறப்பாக தரிசனம் செய்து இருப்பார்கள்.

அத்தி வரதர் சயன கோலத்தில் இருந்து நின்ற கோலத்துக்கு மாறிய பிறகு பக்தர்கள் வருகை பேரலையாக மாறியது. இதையும் அரசு நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சிறப்பான ஏற்பாடுகள் செய்து பக்தர்களை தரிசனம் செய்ய வைத்தனர். ஒரு கட்டத்தில் பக்தர்கள் வருகை 5 லட்சத்தை எட்டியது. தமிழக ஆலய வரலாற்றில் இது புதிய சாதனையாகும். எந்த ஒரு ஆலயத்திலும் தினமும் இத்தனை லட்சம் பக்தர்கள் ஒருசேர படையெடுத்து வந்து ஒரு மூர்த்தியை நேரில் தரிசனம் செய்ததாக வரலாறு இல்லை. அந்த வகையில் அத்திவரதர் புதிய சாதனை படைத்து இருக்கிறார்.

இன்னொரு வகையில் சொன்ன வேண்டுமானால் அத்திவரதரை கடந்த 47 நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து பலன் பெற்றுள்ளனர். இது தமிழகத்தில் சமீப நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள ஆன்மிக புரட்சியாகவும் கருதப்படுகிறது. அத்திவரதர் பற்றி எத்தனையோ மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. பெருமாள், அத்திவரதராக அத்தி மரத்தில் எந்த கால கட்டத்தில் செய்யப்பட்டவர் என்பதில் இன்னமும் உறுதியான தகவல் இல்லை. அது போல அவர் திருக்குளத்துக்குள் எழுந்தருளி இருப்பது ஏன் என்பதற்கும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இவை அனைத்திற்கும் இதுவரை துல்லியமான விடைகள் கிடைக்கவில்லை.

என்றாலும் அத்திவரதர் தமிழகம் முழுவதும் உள்ள 7 கோடிக்கும் மேற்பட்ட மக்களை ஈர்த்து விட்டார். நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியில் ஆரம்பித்து கடைகோடியில் வசிக்கும் சாதாரண விவசாய குடிமகன் வரை அனைத்து தரப்பு மக்களும் அத்திவரதரை தரிசித்து பலன் பெற்றுள்ளனர். அத்திவரதரை வழிபட்டால் நிச்சயம் பலன் உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு மக்கள் படையெடுத்தனர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. அத்திவரதர் தினமும் ஒவ்வொருவித அலங்காரத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.

அத்திவரதரை வழிபடுவதால் கிடைக்கும் முதன்மையான பலனாக “மனம் மகிழ்ச்சி பெறும்” என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஒருவரது மனம் மகிழ்ச்சி பெற வேண்டுமானால் அவர் விரும்பிய அனைத்தும் கிடைத்தால்தான் மகிழ்ச்சி கிடைக்கும். எனவே அத்திவரதரை தரிசித்தவர்களுக்கு விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரையும் ஈர்த்த அத்திவரதர் தமிழக மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலத்து மக்களையும் ஈர்த்து அருள்பாலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களுக்கு மற்ற மாநில மக்கள் விரும்பி வழிபாடு செய்ய வருவது வழக்கம். ஆனால் அத்திவரதரை காண அண்டை மாநில மக்களும் அலை அலையாக வந்தது இதுவே முதல் முறையாகும்.

மொத்தத்தில் அத்திவரதர் இந்த தடவை புதிய புரட்சி படைத்து இருக்கிறார். புதிய சாதனை படைத்து இருக்கிறார். அவரை தரிசனம் செய்தவர்களுக்கு நிச்சயம் அவர் பற்றிய நினைவு நீங்காமல் இருக்கும். நாளை அதிகாலை வரை அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். நாளை பகலில் அவரை மீண்டும் திருக்குளத்தில் எழுந்தருள செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். இன்று இரவு அத்திவரதர் அனந்தசரஸ் புனித குளத்துக்குள் சென்று விடுவார். இனி 2059-ம் ஆண்டுதான் அவரை பார்க்க இயலும். பலன்கள் தந்து நம்மை ஆசிர்வதித்த அத்திவரதர் சென்று வரட்டும். 2059-ம் ஆண்டு வரை காத்திருப்போம்.

- வேதாந்த தேசிகர்
Tags:    

Similar News