செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவில் இருந்து மீண்ட 14 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு

Published On 2021-07-22 11:46 GMT   |   Update On 2021-07-22 11:46 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறைஅதிகரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தற்போது 100-க்கும் கீழ் தொற்று குறைந்துள்ளது. அதன்படி நேற்று ஒரு நாளில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 86 ஆயிரத்து 916 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 132 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 539ஆக உள்ளது.

மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,562 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பலி எண்ணிக்கை 815ஆக உள்ளது.தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் சிலர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறைஅதிகரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட  ஊத்துக்குளி பெண் தாசில்தார் கலாவதி நேற்றுமுன்தினம் பலியானார். தற்போது மாவட்டம் முழுவதும் 14 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 14 பேரையும் டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கருப்பு பூஞ்சை நோய் குறித்து அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில்,
மியூகோர் மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயானது, சுவாசிக்கும் காற்றின் மூலம் உட்புகும் பூஞ்சைகள், சைனஸ் எனப்படும் முக உட்புழைகளில் வளர்ந்து பின்னர் மூளை வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

மனித உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் இறப்பால் அல்லது புண்களால் தோன்றும் கருமை நிறத்தினால் கருப்பு  பூஞ்சையாகிறது. நோய் தீவிரமடையும்போது கண்கள் பாதிக்கப்படுவதுடன் அறுவை சிகிச்சை மூலம் கண்களை அகற்றும் நிலையும் ஏற்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சமீபகாலமாக கருப்பு பூஞ்சை தாக்கி வருகிறது.உடலில் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும் போது தொற்றாளரின் உடலில் கருப்பு பூஞ்சை தாக்கும் வாய்ப்புகள் மிக, மிக அதிகம். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு  பூஞ்சை பாதிக்காமல் இருக்க அதற்கான பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்றார்.
Tags:    

Similar News