செய்திகள்
கமல்ஹாசன்

உள்ளாட்சி தேர்தல்: கமல்ஹாசன் திறந்த வேனில் சென்று கிராமப்புறங்களில் ஆதரவு திரட்டுகிறார்

Published On 2021-09-17 06:49 GMT   |   Update On 2021-09-17 07:45 GMT
கமல்ஹாசன் பிரசார சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்பட உள்ளது.
சென்னை:

9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தல் மூலமாக கிராமப்புறங்களில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் நகர்புறங்களிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவு இருப்பது தெரியவந்தது. இதனை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களில் கட்சியை வலுப்படுத்த கமல் அறிவுறுத்தி இருந்தார்.

கிராமப்புறங்களில் சேவை மனப்பான்மையுடன் இயங்குபவர்களை கண்டறிந்து அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்ட பலர் கமல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு செய்ய கமல்ஹாசன் குழுக்களை அமைத்துள்ளார்.

வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்வு முடிந்து வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. இதன்பிறகு
கமல்ஹாசன்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட உள்ளார்.


இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கிராமப்புறங்களை குறிவைத்து உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட இருக்கிறார்.

கமல்ஹாசன் பிரசார சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து வருகிற 25-ந் தேதிக்கு பிறகு கமல்ஹாசன் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி கமல்ஹாசன் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அதுபோன்று தற்போது கிராமப்புறங்களிலும், திறந்த வேனில் நின்றபடியே பிரசாரம் செய்ய கமல் முடிவு செய்துள்ளார்.

கிராமப்புறங்களில் சென்று பிரசாரம் செய்யும் போது கமல்ஹாசனை பார்ப்பதற்கு அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அப்போது கிராமப்புற மக்களை கவரும் வகையில் பேசுவதற்கு கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். அதற்கான வியூகங்களும் தயாராகி வருகின்றன. கிராமப்புறங்களில் வெற்றி பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் இடங்களை நிச்சயம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிரப்பும் என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடித்தளத்தை கிராமப்புறங்களில் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.


Tags:    

Similar News