செய்திகள்

மசூதியில் துப்பாக்கி சூடு - நியூசிலாந்து பிரதமருக்கு மோடி கடிதம்

Published On 2019-03-15 14:32 GMT   |   Update On 2019-03-15 14:32 GMT
நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #PMModi
புதுடெல்லி:

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். நியூசிலாந்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியானது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், நியூசிலாந்துக்கு தேவைப்படும் உதவிகளை அளிக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது. #MosqueShooting #NewZealandShooting #PMModi
Tags:    

Similar News