செய்திகள்
விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை

Published On 2021-03-26 08:53 GMT   |   Update On 2021-03-26 08:53 GMT
இந்திய-இலங்கை அரசின் நல்லெண்ண நடவடிக்கையின்பேரில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச்சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என இலங்கை அரசு இன்று அறிவித்தது.
ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நேற்று முன் தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்து கொண்டி ருந்தபோது, இலங்கை கடற்படையினர் மரியசிங்கம் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோரின் விசைப்படகுகளை சிறைபிடித்தனர். மேலும் படகுகளில் இருந்த 20 மீனவர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். மற்ற மீனவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

இதேபோல் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற 34 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களிடம் இருந்து மீன்பிடி படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான மீனவர்கள் 54 பேரையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் மற்றும் திரிகோணமலை முகாம்களுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் காலத்தில் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், மீனவ சங்கத்தினரும் கோரிக்கை விடுத்திருத்தனர்.

இதற்கிடையில் சிறை பிடிக்கப்பட்ட 54 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி இலங்கையில் உள்ள இந்திய தூதர அதிகாரிகள் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் இலங்கை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் அடிப்படையில் இந்திய-இலங்கை அரசின் நல்லெண்ண நடவடிக்கையின்பேரில் நேற்று சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தைச்சேர்ந்த 40 மீனவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள் என இலங்கை அரசு இன்று அறிவித்தது. இதில் ராமேசுவரம் மீனவர்களும் அடங்குவார்கள்.

மேலும் அவர்களின் 4 விசைப்படகுகளும் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 54 மீனவர்களில் 40 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மீதம் உள்ள காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்களின் விடுதலை அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் ராமேசுவரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News