ஆன்மிகம்
திருச்செந்தூர்

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2020-09-02 07:44 GMT   |   Update On 2020-09-02 07:44 GMT
5 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனால், கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஆகமவிதிப்படி தினமும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றது. கடந்த 5 மாதங்களாக கோவிலில் பூஜைகள் மட்டும் நடந்து வந்தது.

இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு நேற்று முதல் அனுமதிப்பட்டனர். அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

பக்தர்கள் அதிகாலை 5.30 மணி முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு வடக்குப்புற வழியாக வந்த பக்தர்கள் கோவில் கலையரங்கத்திலும், தெற்குப்புற வழியாக வந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகேயும் சமூக இடைவெளியுடன் அமர வைத்து இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் டோக்கன் முறையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

முககவசம் அணிந்து கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் மகா மண்டபத்தில் உள்ள மூலவர், சண்முகரை மட்டுமே தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். கோவில் பிரகாரங்களை பக்தர்கள் சுற்றுவதற்கு, அர்ச்சனை, அபிஷேகம் செய்ய பூஜை பொருட்கள் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

கோவில் கடற்கரை, நாழிக்கிணறு போன்றவற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் கடற்கரை பகுதிக்கு செல்லாமல் இருப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அதேபோல் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துதல், காது குத்துதல் போன்ற வேண்டுதலுக்கு அனுமதிக்கப்படவில்லை. பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் 13 இடங்களில் கை கழுவுவதற்காக கிருமி நாசினி வைக்கப்பட்டு உள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News