உள்ளூர் செய்திகள்
குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லின் ஒரு பகுதி.

அரசு கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி திரண்ட விவசாயிகள்

Published On 2022-01-28 09:21 GMT   |   Update On 2022-01-28 09:21 GMT
மெலட்டூர் அருகே அரசு கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே காட்டுகுறிச்சி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. காட்டுகுறிச்சி, வேப்பங்குளம், பொந்தையாளம் கிராம பகுதியில் தற்போது சம்பா நெல் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக காட்டுகுறிச்சி அரசு நேரடி நெல்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்து கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி 
விவசாயிகள் காத்திருந்தனர். 

நெல் கொண்டு வந்து கொள்முதல்நிலையத்தில் கொட்டி வைத்து ஒரு வாரகாலமாகியும் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் காட்டுகுறிச்சி நெல் கொள்முதல் நிலையம் முன்பு திரண்டனர்.

பின்னர் கொள்முதல் நிலையம் திறக்கும் வரை காத்திருப்பு 
போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்தனர் தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சுமத்ரா மோகன். காட்டுகுறிச்சி அரசு கொள்முதல் நிலையத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி ஒருவாரத்திற்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படவில்லை எனவும். கொள்முதல்நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

நாளை நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படும் எனவும், எடை மிஷின் உள்பட தளவாட பொருள்கள் வந்துவிட்டதாகவும் கொள்முதல் நிலைய எழுத்தர் உள்பட ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வர உள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

வெள்ளிக்கிழமை கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News