ஆன்மிகம்
சயன நிலையில் ஆதி அத்தி வரதர்

40 ஆண்டுகளுக்கு பிறகு அத்தி பூத்தாற்போல அருள்பாலிக்க வந்தார் ஆதி அத்தி வரதர்

Published On 2019-07-01 04:03 GMT   |   Update On 2019-07-01 04:03 GMT
வசந்த மண்டபத்தில் இருக்கும் ஆதி அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன (படுத்த) நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் தன்னை காண வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.
காஞ்சீபுரம்... பட்டு சேலைகளுக்கு புகழ் பெற்ற நகரம் என்பது மட்டுமல்லாமல், பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமி. இங்கு 108 சிவாலயங்களும், 18 விஷ்ணு ஆலயங்களும் இருக்கின்றன. இந்த 18 விஷ்ணு ஆலயங்களில் முதன்மையானது அத்திகிரி. அத்திகிரி என்பது காஞ்சீபுரத்தில் தெற்கே அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலை குறிக்கும். இந்த கோவிலில் ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனை தாங்கி நிற்பதால், அத்திகிரி என்று அழைக்கப்படுகிறது. கோவில் தீர்த்தங்களாக வேகவதி ஆறு, அனந்தசரஸ் குளம் ஆகியவை இருக்கின்றன.

இந்த கோவிலில் மிகச் சிறந்த நிகழ்வாக கருதப்படுவது, அங்குள்ள அனந்தசரஸ் திருக்குளத்தின் உள்ளே இருக்கும் ஆதி அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நாள் தான். அத்தி பூத்தாற்போல வரும் அந்த நல்ல நாளும் ஆன்மிக அன்பர்களுக்கு இப்போது கைகூடி இருக்கிறது.

இன்று (திங்கட்கிழமை) முதல் அடுத்த 48 நாட்களுக்கு (ஆகஸ்டு 17-ந் தேதி வரை) அங்குள்ள வசந்த மண்டபத்தில் இருந்தபடி, பக்தர்களுக்கு ஆதி அத்தி வரதர் அருள்பாலிக்க இருக்கிறார். இந்த நாட்களில் இவரை ஒரு முறை தரிசிப்பது என்பது ஆயிரம் முறை தரிசித்ததற்கு ஈடாகும் என்று சொல்லப்படுகிறது. 1979-ம் ஆண்டுக்கு பிறகு, கடந்த 40 ஆண்டுகளாக அனந்தசரஸ் குளத்திற்குள் துயில் கொண்டிருந்த ஆதி அத்தி வரதர், கடந்த மாதம் 27-ந் தேதி இரவு பரிகார பூஜைகளுடன் வெளியே எடுக்கப்பட்டார். முன்னதாக குளத்தில் நிரம்பியிருந்த நீர், மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பொற்றாமரை குளத்திற்கு மாற்றப்பட்டது. குளத்தில் இருந்த மீன்களும் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டன.



குளத்தில் இருந்த நீர் வற்றியதும், 4 அடி ஆழத்தில் இருந்து, 12 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்த ஆதி அத்தி வரதரின் சிலை எடுக்கப்பட்டது. இந்த சிலை அத்தி மரத்தினாலே செய்யப்பட்டது என்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். பச்சை நிறத்தில் பாசி படர்ந்திருந்த அந்த சிலை சுத்தம் செய்யப்பட்டு, அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் இரவோடு இரவாக வைக்கப்பட்டு, வாயில் கதவுகள் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன. இந்த நிலையில், நேற்று ஆதி அத்தி வரதர் சிலைக்கு மெருகூட்டப்பட்டது. சாம்பிராணியை தைலமாக காய்ச்சி சிலை முழுவதும் பூசப்பட்டது. அதன் பிறகு, ஆதி அத்தி வரதர் பளபளப்பாக ஜொலித்தார். 40 ஆண்டுகள் காத்திருந்த பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் தயாரானார்.

இந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் வசந்த மண்டபத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு ஆதி அத்தி வரதர் காட்சியளிக்க தொடங்கினார். 1979-ம் ஆண்டு இந்த நிகழ்வின்போது 20 லட்சம் பக்தர்கள் வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த முறை 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசந்த மண்டபத்தில் இருக்கும் ஆதி அத்தி வரதர் முதல் 24 நாட்கள் சயன (படுத்த) நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் தன்னை காண வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார். இந்த 48 நாட்களில் முக்கியமான நாட்கள் என்று, எந்த நாட்களும் வரையறுக்கப்படவில்லை. எனவே, பக்தர்கள் விருப்பப்பட்ட நாளில் அவர்களது வசதிக்கேற்ப வந்து தரிசிக்கலாம். ஆதி அத்தி வரதரின் அருள் பெற்று செல்லலாம்.
Tags:    

Similar News