உள்ளூர் செய்திகள்
சென்னை ஐகோர்ட்

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் -உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-12-16 13:49 GMT   |   Update On 2021-12-16 13:49 GMT
சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை:

தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் பட்டியல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 47707 ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் 4762 அரசு கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீர்நிலைகளை நேரடியாக அளவீடு செய்வதற்கு 12 மாத காலம் அவகாசம் தேவைப்படும். குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், அனைத்து நீர்நிலைகளையும் அந்த சட்டத்தின்கீழ் கொண்டு வரும் வகையில் புதிய சட்ட முன்வடிவை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி  மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை செயலாளர் அறிக்கையின் அடிப்படையில்,  தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் முளைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது சம்பந்தமாக தகுந்த உத்தரவுகளை வழங்குவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்கும்படி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை நிராகரித்த  நீதிபதிகள், குழு அமைப்பதால் எந்த பயனும் இல்லை என்றனர்.

இணையதளத்தில் சர்வே எண்ணை குறிப்பிட்டால் மட்டுமே நீர்நிலை விவரங்கள் தெரிகிறது என்பதால் நீர்நிலைகள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். 

அனைத்து தரப்பு வழக்கறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News