செய்திகள்
கோப்புபடம்

மண் பரிசோதனை-விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள்

Published On 2021-07-15 09:54 GMT   |   Update On 2021-07-15 09:54 GMT
ஆடிப்பட்டதுக்கான விதைப்பு, நடவுப்பணிகளை தொடங்க உள்ள நிலையில் மண்ணை பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை:

உடுமலை வட்டாரத்தில் பி.ஏ.பி., அமராவதி அணை, கிணற்றுப்பாசனம் மற்றும் மானாவாரியாக பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியாக ஒரே வித பயிர் சாகுபடி, தவறான உர மேலாண்மை உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரிக்கிறது. இதற்கு தீர்வாக சாகுபடிக்கு முன்பாக மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண்துறையினர் வலியுறுத்துகின்றனர். 

ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விவசாயிகள் மண் பரிசோதனை செய்வதில்லை. விரைவில் ஆடிப்பட்டதுக்கான விதைப்பு, நடவுப்பணிகளை தொடங்க உள்ள நிலையில் மண்ணை பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-

மண் பரிசோதனை வாயிலாக மண்ணில் உள்ள சத்துகளின் விபரங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சாகுபடியில் உரமிடலாம். இதனால் இடுபொருட்கள் செலவு பல மடங்கு குறைவதுடன் விளைச்சலும் அதிகரிக்கும். விவசாயிகள் தேவைக்காக நடமாடும் மண் பரிசோதனை நிலையமும் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது குட்டியகவுண்டனூர் சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கு நடமாடும் வாகனம் வழியாக மண் பரிசோதனை செய்து தரப்பட்டது. கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை சேகரித்து பரிசோதிக்க விரும்பினால் வேளாண்துறை வாயிலாக நடமாடும் மண் பரிசோதனை வாகனம் அப்பகுதிக்கு கொண்டு வரப்படும். பரிசோதனைக்குப்பிறகு உர பரிந்துரைகளும் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு  வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம் என்றனர்.
Tags:    

Similar News