செய்திகள்
கோப்புபடம்

பொய் வழக்கு பதிந்ததாக கூறி ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்த ஊராட்சி தலைவர்

Published On 2021-04-08 06:47 GMT   |   Update On 2021-04-08 06:47 GMT
உத்தமபாளையத்தில் தன்மீது பொய்வழக்கு பதிந்ததாக கூறி செல்போனில் ஆடியோ வெளியிட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் திருப்பதிவாசகன்(49). இவர் 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க செயலாளராகவும், ரெங்கநாதபுரம் முன்னாள் ஊராட்சி தலைவராகவும் இருந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 18-ம் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள புளியமரத்தில் தூக்குமாட்டிய நிலையில் திருப்பதிவாசகன் இறந்துகிடந்தார். இதுகுறித்து கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே திருப்பதிவாசகன் தான் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு ஒரு ஆடியோ பதிவை அனுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

எனக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி என்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த உண்மையும் இல்லை. முறையான விசாரணை நடத்தப்படவில்லை. எனவே என்மீது புகார் தெரிவித்த பெண்ணின் செல்போனையும், எனது செல்போனில் உள்ள உரையாடல்களையும் சைபர்கிரைம் போலீசார் வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

என்மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக மன அழுத்தத்தில் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இருந்தபோதும் எனக்கு எதிரான பொய்புகாரில் உண்மை இல்லை என்பதை போலீசார் நிரூபிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News